

ஆசியாவின் மிகப்பெரிய அறிவுத் திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் சென்னை புத்தகக் காட்சி தொடங்கியுள்ள இந்த தருணத்தில், கார்க்கி நூலகம், பொன்னி, சாளரம் முதலான பதிப்பகங்களை நடத்தியவரும், தமிழின் முன்னோடி பதிப்பாளர்களில் ஒருவருமான வைகறை வாணன் (75) புத்தகப் பதிப்பு, வாசிப்பு, அச்சிடல் குறித்த அரிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
“கையால் சுற்றுவதில் ஆரம்பித்து கால்களால் இயக்கும் டிரெடில் எனப்படும் அச்சு இயந்திரம் புழக்கத்திற்கு வந்தது. அதுவே மின் அச்சகமாக உருமாற்றம் பெற்று, பிறகு ஆப்செட் அச்சகமாக வடிவம் பெற்றது. வெப் ஆப்செட்டில் உருளை முறை (Cylinder) வந்து ஒரு மணி நேரத்தில் பல பத்தாயிரங்கள் படி எடுக்கும் வசதி ஏற்பட்டது. இதன் உதவியால்தான் நாளிதழ்கள் அச்சடிக்கப் படுகின்றன. லெட்டர் பிரஸ், ஆப்செட், லையனோ மோனோ அச்சு இயந்திரங்கள், இன்றைய நவீன அச்சுமுறை என்ற இத்தனை அச்சுக்கலைத் தலைமுறைகளைப் பார்த்தவர்களில் மிச்சமிருக்கும் ஓர் ஆள் என்று என்னை சொல்லிக்கொள்ள முடியும்” என்கிறார் வாணன்.