

கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக அகராதியியல், மொழிபெயர்ப்பியல், பதிப்பியல், இலக்கணம், இலக்கியத் திறனாய்வு ஆகிய துறைகளில் சோர்வின்றி ஆய்வுகளை மேற்கொண்டும், கட்டுரைகளை எழுதியும், வழிகாட்டியாகவும் விளங்கிய பேராசியர் வ.ஜெயதேவன், கடந்த பிப். 4 அன்று காலமானார்.
திருச்சி மாவட்டத்திலுள்ள உப்பிலியாபுரத்தில் 1947 மே 10 அன்று பிறந்த வ.ஜெயதேவன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தாவரவியல் (1969), முதுகலை தமிழ் இலக்கியம் (1971) பயின்றவர்.
1979இல் சென்னைப் பல்கலைக்கழகக் கழகத்தில் ‘தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு’ எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினைச் செய்த ஜெயதேவனுக்குள் அகராதியியல் குறித்த கூடுதல் ஆர்வமும் தேடலும் அன்றிலிருந்தே தொடங்கிவிட்டது. சென்னை விவேகானந்தா கல்லூரியில் தமிழ்ப் பயிற்றுநராகத் தனது பணியைத் தொடங்கியவர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியர், தமிழ் மொழித்துறைத் தலைவர், பதிப்புத்துறை இயக்குநராகவும் 34 ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வுபெற்றார். ஓய்வுக்குப் பின்னரும் தகைசால் பேராசிரியர், தமிழ்ப் பேரகராதித் திருத்தப்பணித் திட்ட முதன்மைப் பதிப்பாசிரியர் என 15 ஆண்டுகள் அயராமல் தமிழ்ப் பணியினைத் தொடர்ந்து ஆற்றி வந்தார்.