

உண்ணும்போது மேற்கொள்ள வேண்டிய மேலைமரபு நடைமுறைகள் அதிகம். அவற்றை மேசை நாகரிகம் என்று மேலையர்கள் சிறப்பிக்கிறார்கள். உண்ணும்போது சவக்குச்சவக்கென்று ஒலி எழக் கூடாது. சூடான உணவை ஊதி உண்ணக் கூடாது; ஆறும்வரை காத்திருந்தே உண்ண வேண்டும். விருந்தோம்புநர் உண்ணத் தொடங்கிய பிறகே விருந்தினர் உண்ண வேண்டும் என்பன அவற்றில் சில.
உண்ணும்போது கைக்கொள்ள வேண்டிய கீழைமரபு நடைமுறைகள் வேறு. உண்ணும்போது ஒலி எழுவது பொருட்டில்லை. சுவைத்துச் சிலவற்றை உண்ணும்போது சவக்குச்சவக்கென்று சத்தம் வரத்தான் செய்யும் என்பதால் அது சவைத்தல்; சத்தம் வருகிறதே என்று முகம் சுளித்தால் விருந்து எழுந்து போய்விடும். முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து (குறள் 90). ஆகையால், கடிக்கலாம், சவைக்கலாம், சப்பலாம், உறிஞ்சலாம், கொறிக்கலாம், நொறுக்கலாம், நுங்கலாம், மாந்தலாம்.
ஊதி உண்ட ஔவையிடம் ‘பழம் சுடுகிறதா?’ என்று கேட்ட நாட்டில், ஊதி உண்பதும் பொருட்டில்லை. ‘ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுக்க வேண்டும்’ என்றது, பொறுமையை வலியுறுத்தவே அன்றி, ஊதி உண்பதைக் குற்றமாக்க அன்று. சூட்டோடு உண்ண வேண்டுமா ஆறிய பின் உண்ண வேண்டுமா என்பதில் பசிக்குத்தான் முதன்மையே அன்றி, நாகரிகத்துக்கு அன்று. பசி வந்திடப் பத்தும் பறந்து போம். ஆறின கஞ்சி பழங்கஞ்சி.
விருந்தினர் உண்ணத் தொடங்கிய பிறகே விருந்தோம்புநர் உண்பார்; விருந்து இருக்க உண்ணாமையே இங்கு நாகரிகம். வேறுவேறு திசைகள், வேறுவேறு நாகரிகங்கள். வேறுபாடுகள் குற்றமில்லை. ஜோ டி குரூஸ் எழுதிய ‘ஆழிசூழ் உலகு’ புதினத்தில் மேசைக்காரன்மார், மெனக்கெடன்மார் என்று ஒரே வகுப்பின் இருதரப்பினர் வரையப்படுகிறார்கள். மேசைக்காரன்மார் மேசையில் உண்கிற மெல்லோசை நாகரிகர்; மெனக்கெடன்மார் உழைத்து உண்கிற வல்லோசை எளியோர்.
எதிர்கொள்பவர் யார் என்பதைப் பொறுத்துப் பசி என்னும் விருந்தாளியைச் சத்தமில்லாமல் சம்ரட்சணை செய்தும் அனுப்பலாம்; அல்லது பசி என்னும் பாவியைச் சத்தத்தோடு நையப்புடைத்துச் சாத்துபடி செய்தும் துரத்தலாம். நிலை வேறுபாட்டைப் பொறுத்துக் கருத்து வேறுபாடு; கருத்து வேறுபாட்டைப் பொறுத்து நாகரிக வேறுபாடு. ஊட்டி உண்ணுதல்தான் இங்கே கருத்தும் நாகரிகமும். இட்டார் பெரியோர்.