‘விளக்குமாறு பிஞ்சுரும்’ - வம்பு இழுக்கிறவர்களிடம் இப்படி வசைமொழிவார்கள் பெண்கள். விளக்குமாற்றில் இருக்கும் ‘விளக்கு’ என்பது தூய்மைப்படுத்தலைச் சுட்டிநிற்கிறது. ‘மாறு’ என்பது எதைச் சுட்டிநிற்கிறது? மாறு என்பது கோரைப் புல்லைச் சுட்டிநிற்கிறது என்று காட்டுகிறார் வேதிப்பொறிஞரும் தமிழ் அறிஞருமான இராம.கி (வளவு: சம்பாபதி).
தண்பொருநை எனப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரையில், கொற்கையை உள்ளிட்ட பகுதியில் மிகையாய் விளைந்துகிடந்தது மாறு என்கிற கோரை. ஆகையால், அந்தப் பகுதிக்கு மாறோக்கம் என்று பெயர். மாறு ஓங்கி வளர்ந்திருந்த காரணத்தால் அது மாறோக்கம். பாண்டிநாட்டுப் பிரிவுகளில் ஒன்றாக சதாசிவப் பண்டாரத்தார் சுட்டும் குறுமாறை நாடு இதுவாக இருக்கலாம்.
சம்புத் தீவு
மாறு விளையும் நிலத்தின் ஆட்சியாளனாகிய பாண்டியன், மாறன் என்று வழங்கப்பட்டான். மாறு செழித்து விளைந்த நிலத்தினன் ஆனதால் செழியன். இதே பகுதியில் தோன்றியவரும் பன்னிரண்டு ஆழ்வார்களில் தலையாயவருமான நம்மாழ்வாருக்கும் மாறன் என்றுதான் இயற்பெயர்.
ஆனால் நம்மாழ்வாரின் நடவடிக்கைகள் ‘உலகநடைக்கு மாறாக இருந்ததனால், மாறன் என்று திருநாமம் சாத்தியதாக’ப் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் சொல்கிறார். மாறன் மலரடி வாழ்க. பாண்டிநாட்டைப் போலவே சோழநாட்டிலும் சம்பங்கோரை விளைச்சல் மிகுதி. சம்பங்கோரை போலவே இருக்கும் நெல் வகைக்கும் சம்பா என்றுதான் பெயர்.
ஒரு நெல்வகைக்குக் கோரைச்சம்பா என்றே பெயர். சம்பா விளைச்சலால் சீர்காழிக்குச் சம்பை என்றும், பக்கத்தில் உள்ள பூம்புகாருக்குச் சம்பாபதி என்றும் பெயர். சம்பை விளைந்த பகுதியின் ஆட்சியாளர் சாம்பவர்/செம்பியர்.
இந்தியாவுக்கே சம்புத் தீவு என்றுதான் பெயர். அதை ‘ஜம்பு’ ஆக்கித் தமிழில் நாவலந்தீவு என்று வழங்குவாரும் உண்டு. புல்லாகவும் நெல்லாகவும் சம்பை விளைந்தவகையில் பார்த்தால் இந்தியா ‘ஜம்புத்வீபமாக’ அல்லாமல் சம்புத்தீவமாகவே இருக்கவும் வாய்ப்பு உண்டு என்றெல்லாம் இராம.கி. தனது ‘வளவு’ வலைப்பக்கத்தில் குறிப்பிடுகிறார்.