

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய இராச்சியம் (UK) மற்றும் அயர்லாந்து குடியரசு ஆகிய நாடுகளில் மட்டும் பதிப்பிக்கப்படும் சிறந்த ஆங்கிலப் புனைவுகளுக்கு புக்கர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2005இல் தொடங்கப்பட்ட சர்வதேச புக்கர் பரிசு, 2016ஆம் ஆண்டு முதல் தனது புதிய வடிவத்தைப் பெற்றது.
இதன்படி, உலகில் எந்த மொழியில் எழுதப்பட்டிருந்த நாவலாக இருந்தாலும், அந்நாவல் மேற்கண்ட நாடுகளில் உள்ள பதிப்பகம் ஒன்றினால் ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருந்தால், அத்தகைய நூல்களில் சிறந்த படைப்புக்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து வாசகர்களிடம் ஆய்வு: தற்போது இந்த சர்வதேச புக்கர் பரிசு என்பது, உலகிலேயே மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கான மிகவும் செல்வாக்கு மிக்க விருதாகப் போற்றப்படுகிறது.
இந்த சர்வதேச புக்கர் பரிசு தற்போதைய வடிவத்தைப் பெற்று பத்தாவது ஆண்டை எட்டியுள்ளதை முன்னிட்டு, புக்கர் அறக்கட்டளைக்காக ‘நீல்சன்ஐகியூ புக் டேட்டா’ (NielsenIQ BookData) ஓர் ஆய்வை நடத்தியது. சர்வதேச மொழிபெயர்ப்பு இலக்கியப் பிரதிகளுக்கு இங்கிலாந்து வாசகர்களிடம் நிலவும் வரவேற்பு குறித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், இங்கிலாந்து பதிப்புத் துறையில் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் மாபெரும் எழுச்சியைப் பெற்றுள்ளது தெரிய வந்திருக்கின்றது. கடந்த பத்தாண்டு காலத்தில் (2016 - 2025) இங்கிலாந்தில் மொழிபெயர்ப்புப் புனைகதைகளின் விற்பனை 2.9 மில்லியனிலிருந்து 3.8 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதன் சந்தை மதிப்பு 23.2 மில்லியன் பவுண்டுகளிலிருந்து 40.7 மில்லியன் பவுண்டுகளாக வளர்ச்சி கண்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.