

தமிழவேள் உமா மகேசுவரனார், பாரதியார், பாரதிதாசன் மேலும் பல தமிழ் மூதறிஞர்களின் நூற்றாண்டுக் கனவாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இருந்தது. இதன் முதல் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற வ.அய்.சுப்பிரமணியம் தமது பரந்து விரிந்த ஆய்வுப் புலமையால் இக்கனவை மெய்ப்படவைத்துக் கைவசம் ஆக்கினார். தமது முதல் ஐந்தாண்டுக் காலப் பணியினை முடித்து விடைபெற்றபோது, தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் வ.அய்.சு. எழுதிய வாழ்த்துக் கடிதம் ஓர் அறிவு சாசனம்.
அதிலிருந்து: ‘இன்று (31.07.1986) மாலை ஐந்து மணியுடன் பொறுப்பை ஒப்புவித்து நான் திருவனந்தபுரம் செல்கிறேன்... பரதன் பாதுகாத்த பாதுகையைப் போல் பிறர் கையில் மகிழ்ச்சியுடன் விட்டுச்செல்லும் உணர்வு ஏற்படுகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகம் பிற பல்கலைக்கழகங்கள் போன்ற ஒன்றன்று.
இது உயராய்வு மையம். இங்கே அறிவு சான்ற சிலரே இடம்பெற முடியும். இடம்பெற்றவர்களும் தமது அறிவாற்றலை வெளிப்படுத்தத் தொடர்ந்து தம்மைத் தாமே தேர்வுக்குட்படுத்திக்கொள்ள வேண்டும். என்று ஆய்வின் தரம் குறைகிறதோ அன்று தமிழ்ப் பல்கலைக்கழகம் தளர்ந்துவிடும். நல்கைகள் குறையும். இந்த நிறுவனம் நிலைகுலைந்துவிடும். இதனை ஒவ்வொருவரும் நினைவிற் கொள்வது நன்று.’
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஏ.சி.செட்டியார், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஆகியோரிடம் பயின்றவர் அறிஞர் வ.அய்.சு. பின்னர், திருவனந்தபுரம் சென்று வையாபுரிப் பிள்ளையின் ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்தக் காலத்தில் அமெரிக்காவின் ராக்பெல்லர் அறக்கட்டளை நடத்திய மொழியியல் பயிற்சியில் கலந்துகொண்டு, அமெரிக்கா செல்லும் வாய்ப்பைப் பெற்றார். அங்கு இண்டியானா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஹவுஸ் ஹோல்டரின் வழிகாட்டலில் முனைவர் பட்டம் பெற்றார்.