

இந்திய நாட்டின் பிரதமரும், துணைக் குடியரசுத் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சரும் ஒரு தமிழ்ப் பேராசிரியரின் மறைவுக்கு இரங்கல் செய்தியைத் தெரிவித்தார்கள் என்றால், அது தெ. ஞானசுந்தரம் மறைவுக்கு மட்டும்தான். சமூக ஊடகங்கள் பலவும் தமிழ்க்கடல் என்று தெ.ஞா.வைப் புகழ்ந்தது மிகையல்ல.
உண்மையில் தெ.ஞா. தமிழ்க்கடல்தான். புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியற்புலத்தில் கம்பன் இருக்கையை தெ.ஞா. அலங்கரித்தபோது, இசைஞானி இளையராஜா தெ.ஞா.வைச் சந்திக்க வந்ததையும் அவருடன் கலந்துரையாடி மகிழ்ந்ததையும் அருகிலிருந்து பார்த்துப் பிரமித்திருக்கிறேன். சங்க இலக்கியங்களில் எந்தப் பாடலையும் அதன் உரைகளையும் குறிப்புகள் இல்லாமல் வகுப்பறைகளில் மட்டுமல்ல, பல இலக்கிய மேடைகளில் சரளமாக அருவிபோல் கொட்டுகின்ற ஆற்றல் படைத்தவர் தெ. ஞானசுந்தரம்.
டி.கே.சி. கம்பனில் மூழ்கித் திளைத்ததால் சங்க இலக்கியங்களை நாடியதில்லை. மறைமலைஅடிகள் சங்க இலக்கியங்களின்மீது நாட்டம் கொண்டதால் கம்பராமாயணம் குறித்து எழுதியல்லை என்பது திறனாய்வுலகம் அறிந்த செய்தி. ஆனால் தொல்காப்பியம் தொடங்கி, இன்றைய நவீன இலக்கியம்வரை ஆழ்ந்து வாசித்தவர் தெ.ஞானசுந்தரம்.