

அடித்தட்டு மக்களின் தனித்துவங்கள் மீது மார்க்சியக் கண்ணோட்டத்தோடு வெளிச்சம் பாய்ச்சிய வரலாற்றாசிரியர் சுமித் சர்க்கார் மறைந்துவிட்டார்.
வரலாறு, சமூகவியல் துறைகளில் மிக நீண்ட காலம் இயங்கிவந்தவர் சுமித் சர்க்கார். அவரின் மறைவு இந்தியச் சமூகத்துக்குப் பேரிழப்பு. அவரது வாழ்வும் எழுத்தும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஆவணங்கள்.
துணிச்சல் மிக்கவர்
சுமித் சர்க்கார் 1939ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்தார். அவரது தந்தை சுஷோபன் சர்க்கார், கொல்கத்தா மாநிலக் கல்லூரியின் புகழ்பெற்ற மார்க்சிய வரலாற்றாசிரியர். அவரது தாய் மாமா பி.சி.மகலனோபிஸ்; புள்ளியியல் துறையில் சிறந்து விளங்கியவர். அவரது வீட்டில் ரவீந்திரநாத் தாகூர், கார்ல் மார்க்ஸ் எனப் பல ஆளுமைகள் குறித்த விவாதங்கள் நடைபெறும்.
சர்க்காரின் வாழ்க்கை, மதிப்பீடுகள் நிறைந்த ஒரு வாழ்க்கையாக அமைந்திருந்தது. 2004இல் மேற்கு வங்க இடதுசாரி அரசு அவருக்கு ரவீந்திர புரஸ்கார் இலக்கிய விருதை வழங்கியது. ஆனால் 2007இல் நந்திகிராமில் விவசாயிகள் மீது காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து, அந்த விருதைத் திருப்பிக் கொடுத்து, பரிசுத் தொகையை நிவாரண நிதிக்கு வழங்கினார்.