

இந்திய ஜென் ஞானியும், போதி சங்கா ஜென் மரபின் நிறுவனருமான அமா சாமி, 2026 நவம்பர் 7ஆம் நாள் கொடைக்கானல் அருகே வத்தலக்குண்டில் தனது 90ஆம் வயதில் காலமானார்.
கிறிஸ்துவம், பெளத்தம், இந்து சமய மரபுகள் ஆகியவற்றுக்கு இடையே ஆன்மிகப் பாலம் அமைத்த ஒரு சிறப்புமிக்க ஆன்மிகத் தேடலாளராக வாழ்ந்தவர் அவர்.
இந்தியாவுக்குத் திரும்பிய ஜென்
1936ஆம் ஆண்டு பர்மாவில், இந்திய கிறிஸ்துவப் பெற்றோருக்குப் பிறந்தவர் அமா சாமி. பர்மாவில் வளர்ந்தபோது பெளத்தத் துறவிகளுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பர்மா போருக்குப் பின் தாயகம் திரும்பி, தனது இளமைப் பருவத்தை இந்தியாவில் கழித்தார்.
வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு சவால்களையும் ஆழமான ஆன்மிகத் தேடலையும் எதிர்கொண்டார். அவரது ஆன்மிகத் தேடல் வழக்கமான கிறிஸ்துவ சமய எல்லைகளைக் கடந்து விரிந்தது. இந்து, பெளத்த சமய மரபுகளிலும், குறிப்பாக ரமண மகரிஷியின் போதனைகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார்.
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பெனடிக்டைன் துறவியான சுவாமி அபிஷிக்தானந்தா வழியாக ரமண மகரிஷியின் ஆன்மிகச் சிந்தனைகளை அறிந்துகொண்டார். அவரது ஆன்மிகத் தேடல் இறுதியில் ஜென் பெளத்த மரபை நோக்கி அழைத்துச் சென்றது.
ஜெர்மனியைச் சேர்ந்த இயேசு சபைக் குருவும் ஜென் ஞானியுமான அருள் தந்தை ஹ்யூகோ எனோமியா-லசாலேவின் ஊக்கத்துடனும் வழிகாட்டுதலுடனும் ஜப்பானுக்குச் சென்று, யமடா கோன் ரோஷியிடம் சான்போ கியோடான் மரபில் தீவிரமான ஜென் பயிற்சியை மேற்கொண்டார்.
பலர் ஜென் கற்றுக்கொண்டாலும், ஒரு சிலர் மட்டுமே, அதைப் பிறருக்குக் கற்பிக்கின்ற ஆசிரியராக, ஜென் குருவாக (Zen Master) உயர்த்தப்படுவார்கள். அப்படி அமா சாமியும் ஒரு ஜென் குருவாக 1982இல் நியமிக்கப்பட்டார். இந்தியாவின் முதல் ஜென் குரு அவர்தான்.
அவருக்கு ‘ஜென் உன்-கென்’ என்கிற ஜப்பானிய தர்மப் பெயர் வழங்கப்பட்டது. “இந்தியாவில் இருந்து ஜப்பான் வந்த ஜென் பெளத்தத்தை, ஜப்பானுக்கு வந்து கற்றுக்கொண்டு, மீண்டும் அது பிறந்த இந்தியாவுக்கே, நீங்கள் எடுத்துச்செல்வதில் மிகுந்த மகிழ்ச்சி” என்று அவரது குரு யமடா கோன் ரோஷி குறிப்பிட்டார்.