மக்கள் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் (1931 - 2026) | அஞ்சலி

மக்கள் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் (1931 - 2026) | அஞ்சலி
Updated on
2 min read

“ரேஷன் கடையில் பொருள்கள் கிடைக்கவில்லை என்றால் போராடுவதுபோல், அரசுப் பள்ளிகளுக்காகவும் மக்கள் வீதியில் இறங்கிக் குரல் கொடுக்க வேண்டும்” என்று ஓயாது சொல்லிக்கொண்டிருந்த மக்கள் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் மறைந்துவிட்டார். ‘உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கல்வியே’ என்று உடலும் உணர்வும் உணர்ச்சிகளுமாகத் ததும்பிய அவரது மறைவு கல்விப் புலத்துக்குப் பேரிழப்பு.

சமூக அக்கறை: விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்த காலத்திலேயே, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில், ‘தாய்மொழியே கற்றலுக்கு ஏற்ற அறிவியல்பூர்வமானது’ என்று தமிழ்வழிக் கல்வி முறையைத் துணிச்சலாக அறிமுகப்படுத்தியவர், இவருடைய தந்தை சீனிவாசன். பின்னாளில் கோவைக்குக் குடிபெயர்ந்து அங்கே தனது கல்வித் தொண்டைத் தொடர்ந்தார்.

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்றிருந்த சமூகத்தில், தன்னுடைய மகள் பத்மாவைக் கல்லூரியில் சேர்த்தவர் சீனிவாசன். பார்வையற்றோர் எண்ணற்றோரின் இமையாக இருந்து அவர்தம் வாழ்க்கையில் கல்வி ஒளி ஏற்றி வைத்தவர் பத்மா.

ராஜகோபாலனின் தம்பி எஸ்.எஸ்.விஜயராகவன், தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி, காப்பீட்டுத் துறையை நாட்டுடைமை ஆக்கும் முடிவை அரசு எடுத்ததில் முக்கியப் பங்களித்தவர்.

சென்னையில் கார்ல் மார்க்ஸ் நூலகம் நிறுவி ஆராய்ச்சி மாணவர்கள், பார்வையற்றோர் பயன்பாட்டுக்காக அர்ப்பணித்தவர் இவருடைய அண்ணன் எஸ்.எஸ்.கண்ணன். இப்படியான புரட்சிகர சமூக வேட்கை கொண்ட பின்புலத்திலிருந்து வந்த ராஜகோபாலன், அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். கற்பித்தலோடு நின்றுவிடாமல், கல்வியின் நோக்கம் என்ன என்பதை உணர்ந்திருந்தார். அதனால், கல்வித் திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற துடிப்போடு இயங்கிக்கொண்டிருந்தார்.

வித்தியாசமான அணுகுமுறை: தொழில் நகரமான கோவையில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கத் தங்களது கூலியை இழந்து பெற்றோர் அவதிப்படக் கூடாது என்று, ஆண்டுதோறும் உழைப்பாளர் நாளான மே நாளன்று ஒரு மகத்தான பணியை ராஜகோபாலன் செய்தார். தொழிலாளிகள் தங்களது சீருடையில் கோவையின் வீதிகளில் தமது குழந்தைகளோடு ஊர்வலமாக வந்து பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் நிகழ்ச்சியில் கொண்டாட்டமாகக் கலந்துகொள்வதை உறுதிப்படுத்தினார்.

உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று கல்வி குறித்த சிறப்பு மாநாடுகளில் உரை நிகழ்த்தியவர் ராஜகோபாலன். பள்ளிகளில் தண்டனை முறை அறவே கூடாது என்று வாதாடியவர். ஆசிரியர் மாணவரிடையே ஆரோக்கியமான உறவு நிலவ வேண்டும் என உறுதியாகக் கூறிவந்தவர்.

தான் தலைமை ஆசிரியராக இருந்தபோது, மாணவர் தேர்தல்களை முறையாக நடத்தி, மாணவர் நடத்தை விதிமுறைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் பொறுப்பை அவர்களிடமே வழங்கும் மாறுபட்ட அணுகுமுறையை வெற்றிகரமாகக் கையாண்டவர்.

சோவியத் ஒன்றியத்துக்குச் சென்றுவந்த அனுபவத்தில், அந்நாட்டின் கல்வி, சமூக வாழ்க்கை குறித்த நுட்பமான விவரங்களைச் சேகரித்து வந்து, அவற்றின் நற்கூறுகளை இங்கே எவ்விதம் பயன்படுத்தலாம் என்பதை உரிய தருணங்களில் எடுத்துக் கூறிவந்தார்.

சமரசமின்மை: தமிழ்​நாட்டு மாணவரது கற்றல் திறன், கற்பித்தல் முறைகள் குறித்துப் பெரிதும் அக்கறை செலுத்​திவந்​தார். ஆண்டு​தோறும் வரும் கற்றல் குறித்த ஆய்வறிக்கைகள் மீதான கருத்​தாக்கம், மாற்றத்​துக்கான கலந்தாலோசனை நிகழ்வு​களில் உந்து சக்​தி​யாகத் திகழ்ந்​தார். முன்னாள் துணை வேந்தர் வே.வசந்​திதேவி, பேராசிரியர் ச.மாடசாமி போன்ற கல்வி​யாளர்​களோடு நெருக்கமான தோழமையோடு மாற்றத்​துக்கான வேட்கை குன்றாமல் கல்வித் தளத்தில் இயங்கிவந்​தார்.

அரசுப் பள்ளியில் ஆளும் கட்சி நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று எதிர்த்துப் போராடிய ராஜகோபாலனை, அப்போதைய முதல்வர் காமராசர் பாராட்டி, தனக்கே தெரியாமல் நடந்த முயற்சி என விளக்கியது குறிப்பிடத்தக்கது. 1980களில் எம்ஜிஆர் அரசு, சுயநிதிக் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கத் தொடங்கியபோது கடுமையாக விமர்சித்தவர் ராஜகோபாலன்.

இப்படிப் பல நிகழ்வுகள் உண்டு. இதற்குப் பின் ஒரு முறை ராமாவரம் தோட்டத்துக்குப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து முதல்வராக இருந்த எம்ஜிஆர் சமாதானப்படுத்தித் தன்னோடு சமதையாக உண்ணவும் வைத்து அனுப்பினாராம். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்த சமச்சீர் கல்வித் திட்டத்துக்கான குழுவில் இவரது பங்களிப்பு முக்கியமானது.

நீட் நுழைவுத் தேர்வு முறையை ராஜகோபாலன் கடுமையாகச் சாடினார். பல்கலைக்கழக செனட் உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் துணைவேந்தரே ஆனாலும் எவ்விதத் தயக்கமும் இன்றித் தவறுகளைச் சுட்டிக்காட்டி, சரிசெய்யும்வரை போராடுவார்.

தன்னலமற்ற வாழ்வு: மாணவர்களிடம் அன்பு பாராட்டி அவர்களை முற்போக்கு வழித்தடத்தின் திசையறிய வைப்பதில் நிகரற்று இருந்தவர். தமது கைப்பொருள் யாவும் ஏழை எளிய மக்கள் முன்னேற்றத்துக்கு என்றே இவரும் இவருடைய இணையர் சீதா அம்மையாரும் இடையறாது ஈந்து உவந்து வாழ்ந்தனர்.

கல்விப் போராளியாக மட்டுமல்ல, ஆசிரியர் உரிமைப் போராளியாகவும் திகழ்ந்த ராஜகோபாலன், தலைமை ஆசிரியர்களுக்கான சங்கத்தைத் தொடங்கியதில் முக்கியப் பங்காற்றியவர்.

1980களில் உரிமைக்கான களத்தில் ஆசிரியர் இயக்கத்திலும், பின்னர் ஆசிரியர் - அரசு ஊழியர் இயக்கக் கூட்டமைப்பான ஜாக்டீ (JACKDI) மேடையிலும் இவரது பங்கேற்பும் தலைமைப் பங்களிப்பும் சிறப்பு வாய்ந்தவை. தன்னுடைய இணையர் சீதாவை செப்டம்பர் 27, 2024இல் பறிகொடுத்தபின் மிகவும் தளர்ந்துபோய்விட்ட ராஜகோபாலன், தனிமையின் பரிதவிப்புக்குப் பெரிதும் ஆட்பட்டு இருந்தார்.

தன்னைப் பார்க்க வரும் யாரிடத்தும் முதுமையும் உடல்நலக் குறைவையும் மீறி, கல்வி பற்றியே பேசிக் கொண்டிருந்தார். அவரது பாடுகளைப் பார்த்து இயற்கையே மிகுந்த பரிவோடு அவரை அரவணைத்துக் கொண்ட ஒரு தருணத்தில் பிரியாவிடை பெற்றுக்கொண்டார் என்றே தோன்றுகிறது.

அவர்கள் விருப்பப்படியே இருவரது பூதஉடல்களும்  ராமச்சந்திரா மருத்துவமனையில் மாணவர்கள் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வண்ணம் ஒப்படைக்கப்பட்டிருப்பது இந்தத் தம்பதியின் தன்னலமற்ற வாழ்வுக்கான சாட்சியம்!

- தொடர்புக்கு: sv.venu@gmail.com

மக்கள் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் (1931 - 2026) | அஞ்சலி
எப்ஸ்டீன் ஃபைல்ஸ்: ரகசிய ஆவணங்களும், வலுக்கும் ‘பாலியல் பயங்கரம்’ சர்ச்சையும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in