கவிஞராய் அறியப்பட்ட அறிஞர்

சாதாரணமானதைக்கூட நுணுகி நோக்கி ஆராயும் குணம்கொண்டவர் கவிமணி
கவிஞராய் அறியப்பட்ட அறிஞர்
Updated on
3 min read

பள்ளிப் பாடநூல்களைத் திருத்தி அமைக்கும் குழுவில் இருந்தார் அவர். ஒருநாள் அவர்கள் எடுத்துக்கொண்ட பாடப்புத்தகத்தில் ‘கிளி’ என்னும் பாடமும் அதற்கான படமும் வரையப்பட்டிருந்தது.

எல்லாரையும் புத்தகத்தை மூடிவைக்கும்படி சொன்ன அவர், ‘கிளியின் கால்களில் முன்னே எத்தனை விரல்கள்? பின்னே எத்தனை விரல்கள்?’ என்று வினா தொடுத்தார். ‘இவ்வளவுதானா! முன்னே மூன்று; பின்னே ஒன்று’ என்றனர் குழுவினர்.

புத்தகத்தைத் திறந்து படத்தைப் பார்த்தபோதும் அவ்வாறே இருந்தது. ‘இது பிழை; கிளிக்கு விரல் முன்புறத்தில் இரண்டு; பின்புறத்தில் இரண்டு’ என்று கூறிய அவர், உயிருள்ள கிளியைக் காட்டி நிரூபித்தார்.

யாவரும் மூக்கின்மேல் விரல்வைத்தனர். இப்படிச் சாதாரணமானதைக்கூட நுணுகி நோக்கி ஆராயும் குணம்கொண்ட அந்த மனிதர் வேறு யாருமல்லர்; கவிஞராக அறியப்பட்ட அளவுக்கு, அறிஞராக அறியப்படாத கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைதான்.

குறும்பும் மேதைமையும்

கவிமணி தமது இளம் பருவத்திலேயே தென்னிந்திய வரலாற்றாய்விலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் பெரிதும் நாட்டம்கொண்டிருந்தார். இதற்குக் காரணமாய் அமைந்தவர் திருவனந்தபுரம் அரசுக் கல்வெட்டு ஆய்வுத் துறையில் பணிபுரிந்தவரும், ராவ்பகதூர் சுந்தரம் பிள்ளையின் உதவியாளருமான கணேச பிள்ளை.

அவர் ஒருநாள் சாசனத் தாள் கட்டுடன் தேரூருக்கு வந்தபோது, அவரது மைத்துனரின் உதவியோடு – குறும்புத்தனமாய் அவருக்குத் தெரியாமல் – அவற்றையெல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டார் கவிமணி.

கணேச பிள்ளை திருவனந்தபுரம் போவதற்கு முன்பாகவே, ‘திருவாங்கூர் டைம்ஸ்’ என்னும் வார இதழில் அக்குறிப்புகள் ஒன்று திரண்டு, ‘சுங்கான் கடை’ என்னும் தலைப்பில் கட்டுரையாக வெளிவந்தது. ‘நாஞ்சில் நாடன்’ என்னும் புனைபெயரில் வெளியான அக்கட்டுரையைக் கண்டு கணேச பிள்ளையே வியப்பும் பதற்றமும் அடைந்தார்.

பின்னாளில் வரலாறு, கல்வெட்டு ஆய்வுகளில் கவிமணி நிபுணத்துவம் பெறுவதற்கும் மறுப்புரைகள் எழுதுவதற்கும் இந்தத் தொடக்கக் காலக் கட்டுரையே அடிப்படை. அவ்வகையில் ஆங்கிலத்தில் வெளிவந்த ‘காந்தளூர் சாலை’ இவரது புலமைக்குச் சான்று.

‘கேரளா சொசைட்டி பேப்பர்ஸ்’, ‘ஜேனர்ல் ஆஃப் ஓரியண்டல் ரிசர்ச்’ ஆகிய இதழ்களில் கல்வெட்டுகள், சாசனங்கள் பற்றியும், அழகிய பாண்டிபுரம் முதலியார் வீட்டு ஓலைகள் பற்றியும் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in