

உழவுத் தொழிலுக்கு என்றே தனி நிதிநிலை அறிக்கையை வழங்கிவரும் மாநிலம் தமிழ்நாடு. காய்தல் உவத்தல் இன்றி தவெக அரசும் திமுக அரசை இதில் தொடர்வது வரவேற்புக்குரியது. இந்தப் பூவுலகின் பெரும்பான்மைத் தொழிலாக இருந்த வேளாண்மை சரிபாதியாகச் சரிந்துவருகிறது.
இப்போதைய புறச்சூழல் உழவுத்தொழிலை அக்கினிக்குண்டத்தின் நடுவில் நிறுத்தியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் எல் நினோவின் தாக்கம் தெரிகிறது.
தென்மேற்குப் பருவமழை இந்தியா முழுதும் ஜூன் மாதம் பெய்திருக்க வேண்டிய அளவு 16.5 செ.மீ; பெய்ததோ 9.95 செ.மீ. இயல்பான அளவைவிட 40 சதவீதம் மழை குறைந்து, அதனால் 23 சதவீதம் சாகுபடிப் பரப்பு குறைந்துள்ளது.
விவசாயக் கடன்
‘அந்தப் பெண்ணின் தலையில் பெரிய தவலைப் பாத்திரம் இருந்தது. இடுப்பில் ஒரு குடம். வலது கையில் ஒரு செம்பு. எல்லாவற்றிலும் தண்ணீர் ததும்ப அவள் நடந்தாள்’ என இந்தியா வந்த ஜான் அகஸ்டன் வால்தர் என்பவர் 1806இல் பிரமிப்போடு எழுதியிருக்கிறார்.
அவரை வியக்க வைத்த காவிரியை இப்போது உப்பு அரிப்பது கல்லணையின் அருகில் உள்ள விட்டலபுரத்திலேயே தொடங்கிவிட்டது. ஓராண்டிலேயே இயற்கை தாக்குதலின் விகாரம் தெரிகிறது. குறுவையின் இயல்பான சாகுபடிப் பரப்பு 4.4 லட்சம் ஏக்கர். 2025இல் 6 லட்சம் ஏக்கருக்குச் சாகுபடி விஞ்சியது.
பற்றாக்குறைக் காலப் பகிர்வு நீரைக்கூட கர்நாடகம் மறுக்கும் சூழலில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி இந்த ஆண்டு குறுவைச் சாகுபடிப் பரப்பு 3.55 லட்சம் ஏக்கர் என அரசு உத்தேசித்தாலும் 1.5 லட்சம் ஏக்கர்தான் இதுவரை பாசனம் நடந்துள்ளது. மேகேதாட்டு உள்ளிட்ட கர்நாடகத்தின் இடைஞ்சல்களைச் சட்டபூர்வமாகச் சந்திக்க ஒரு நிரந்தர ஏற்பாட்டைச் செய்தாக வேண்டும்.
கற்க வேண்டிய பாடம்
மறுபக்கம் உறுத்தும் இன்னொரு பிரச்சினை - தப்பித்தவறி மழை பொழிந்து வேளாண்மை செழிக்கும் தருணத்தில், அறுவடையான தானியங்கள் வீணாகிக்கிடப்பதுதான். தமிழகத்தில் ஏறத்தாழ 130.33 லட்சம் ஹெக்டேர் விளைநிலம் உள்ளது.
3,000-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்களும் 385 சேமிப்புக் கிடங்குகளும் உள்ளன. இவற்றில் 4.53 லட்சம் டன் நெல் சேமிக்கலாம். ஆனால், கொள்முதல் ஆவதோ 48 லட்சம் மெட்ரிக் டன். சராசரியாக 40 லட்சம் மெட்ரிக் டன் சேமிக்க வசதி இல்லை.