“அப்பா, என் தோழியின் பாட்டி கீழே விழுந்து மருத்துவமனையில் இருக்கிறார்” என்று ஐரோப்பாவிலிருந்து திறன்பேசியில் என் மகள் சொன்னார்.
அந்தப் பாட்டிக்குத் தொண்ணூற்றெட்டு வயது. காது கேட்காது. பார்வைத் திறனும் மிகக் குறைவு.
ஆனாலும் ஐரோப்பாவின் ஒரு கிராமத்தில் தனி வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். அவருடைய மகனும் பேரக் குழந்தைகளும் பக்கத்துத் தெருவில்தான் இருந்திருக்கிறார்கள்.
“பக்கத்தில் இருந்துமா அவரைத் தனியாக விட்டிருக்கிறார்கள்?” என்று கேட்டேன் அதிர்ச்சியுடன். மகள் சிரித்தார். “அப்பா, இங்கே அதுதான் பெருமை. கடைசிவரை யாரையும் சாராமல் தன் வீட்டில் வாழ்வதை அந்தப் பாட்டி தன் கௌரவமாக நினைக்கிறார். குடும்பத்தினரும் அதைத்தான் மதிக்கிறார்கள். வீட்டுக்குள் முடக்கிப் போட்டுப் பார்த்துக்கொள்வதை அவர்கள் அன்பாக நினைப்பதில்லை.”
பொருந்தாத ‘ஆபரேட்டிங் சிஸ்டம்’
இதே நிலை நம் ஊரில் இருந்திருந்தால் சமூகம் எப்படியெல்லாம் வசைபாடியிருக்கும்? நம்மூரில் ஐம்பத்தைந்து வயதைத் தொட்டாலே, ‘இந்த வயசான காலத்தில் என்னைப் பார்த்துக்கொள்ள ஆளில்லை’ என்கிற புலம்பல்கள் எழத் தொடங்கிவிடுகின்றன. வயதானால் நாம் பலவீனமானவர்கள் என்கிற எண்ணத்தை முதியவர்களே தங்களுக்குள் பதித்துக்கொள்கிறார்கள்.
ஓர் அமெரிக்க வாழ் இந்திய நண்பருக்கு நாடு திரும்பும் சூழல் வந்தது. அமெரிக்காவில் பள்ளிப் படிப்பை முடித்த அவரின் மகன், அங்கேயே அடிப்படை இயற்பியல் படிக்க விரும்பினான். நல்ல பல்கலைக்கழகங்களில் இடமும் கிடைத்தது. ஆனால், பெற்றோருக்கு அதில் உடன்பாடில்லை.
“எங்களுக்கு இல்லாத சொத்தா? ஊருக்கு வந்தால் இருக்கும் பணத்தை வைத்துத் தொழில் செய்யலாம். எங்கள் வயதான காலத்தில் பக்கத்திலேயே இருப்பான்” என்றார் நண்பர்.
“மகனுக்குத் தொழில் செய்யும் ஆர்வம் உண்டா?” “அது அவசியம் இல்லை. இருப்பதை வைத்து வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டியதுதானே!” “அப்படியானால், அறிவியல் படிக்க நான் இன்னொரு பிறவியில் வேறு யாருக்காவது மகனாகப் பிறக்க வேண்டுமா?” என்று கேட்டான் மகன்.