தமிழ்ச் சமூகம் அண்ணல் அம்பேத்கருக்கு செய்யும் நன்றிக் கடன்
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் (1891-1956) 5.12.1956 இரவு 11 மணி வரை, தாம் எழுதிய ‘புத்தரும் அவரது தம்மமும்’ என்ற நூலுக்கு முன்னுரையை உதவியாளருக்குச் சொல்ல அவர் எழுதினார். பிறகு படுக்கச் சென்ற அம்பேத்கர் நீண்ட நிலையான உறக்கத்தில் ஓய்வு பெற்று விட்டார். டிசம்பர் 6ஆம் நாள் அவர் வாழ்க்கைப் பயணம் முடிவுக்கு வந்ததாக உலகுக்கு அறிவிக்கப்பட்டது.
அம்பேத்கர் மறைந்து சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜே.பி.பன்சோத் என்னும் வழக்கறிஞர் இதுவரை வெளிவராத அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் அனைத்தையும் வெளியிட வேண்டும் என்று வழக்குத் தொடுத்தார். 1978இல் ‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் மூல ஆவணங்கள் வெளியீட்டுக் குழுவை’ மகாராட்டிர அரசு உருவாக்கியது. இந்தக் குழுவுக்கு டாக்டர் வசந்த் மூன் (1932-2002) சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார்.
