

சென்னை கவின் கலை கல்லூரியில் 2002 முதல் 2006 வரை பயின்ற ஓவியத் துறை மாணவர்கள் இணைந்து ‘United Brushes 2026’ என்ற ஓவியக் கண்காட்சியை செப்டம்பர் 6 தொடங்கி 12ஆம் தேதி வரை லலித் கலா அகாடமியில் நடத்தினர்.
வண்ணமயமான ஓவியங்கள் நிறைந்த அரங்கினுள் ஜே.ஆண்டனி வரைந்த கறுப்பு வெள்ளை ஓவியங்கள் நம்மை வரவேற்கும் தன்மையில் அமைந்திருந்தன. தூண்டில் மீன்கள், கூடையில் வைக்கப்பட்ட மீன் என முதல் பார்வையிலேயே அந்தக் கோட்டுலகிற்குள் இழுத்துக்கொண்டார் ஆண்டனி.
தென் மாநிலங்களில் பரவலாக நிகழ்த்தப்படும் கூத்துக் கலை வடிவங்களை, அடவுகளைத் தனித்தனி ஓவியங்களாக வரைந்து, அவற்றை ஒட்டோவியமாகக் (Collage) காட்சிப்படுத்தி இருந்தார் டாக்டர் எஸ்.ஏ.வி.இளஞ்செழியன். அடுத்தடுத்த ஓவியங்களில், வரலாற்றின் நினைவுகளை எந்த இடையீடுகளும் இன்றி, கல்வெட்டு பதிப்பது போன்ற தன்மையில் முன்வைத்தார் இளஞ்செழியன்.