

வெ.சுகுணா, மு.காளிமுத்து
இந்தியா முழுவதும், மாணவர்களின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளில் குறைந்துவருவதையும், தனியார் பள்ளிகளில் அதிகரித்துவருவதையும் பார்க்கிறோம். அரசுப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளி, ஓராசிரியர் பள்ளி என்கிற நிலைக்குத் தள்ளப்படுவதையும், சில பள்ளிகள் மூடப்படுவதையும் காண்கிறோம்.
அதேவேளையில், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் மூடப்படும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவுதான். அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பதிலும் தரம் உயர்த்துவதிலும் அரசு, ஆசிரியர்கள், வட்டார மக்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் பொறுப்பு இருக்கிறது.
இதில் அரசாங்க நிர்வாகத்துக்குத்தான் முதன்மைப் பொறுப்பு. தமிழகத்தில் பல அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தபோது, ஆசிரியர்களின் முயற்சியாலும் தன்னார்வலர்களின் பங்களிப்பாலும் ஊர் மக்களின் உதவியாலும் சில பள்ளிகள் பாதுகாக்கப்பட்டன. மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.
ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்
அப்படி ஒரு பள்ளிதான் கோவை மாநகரின் மசக்காளிப்பாளையம் பகுதியில் இயங்கிவரும் பள்ளி. 1956இல் நகராட்சி ஆரம்பப் பள்ளியாகத் தொடங்கப்பட்டு, 1966இல் நடுநிலைப் பள்ளி; 1981இல் கோவை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியானது. இதில் 2015இல் 125ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 2025இல் 623ஆக (ஐந்து மடங்கு) உயர்ந்தது.
அவர்களில் ஆண்கள் 326, பெண்கள் 297. இப்பள்ளி குறித்து உதவித் தலைமை ஆசிரியர் வெ.சுகுணா சொல்லும் தகவல்கள் பிரமிப்பூட்டுகின்றன. நிரந்தர ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு நியமித்த ஆசிரியர்கள் என 20 ஆசிரியர்கள் தற்போது பணியாற்றுகின்றனர்.
மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பிப்பதோடு மாணவர்களின் திறனை வளர்ப்பதற்காகப் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. வாரந்தோறும் சனிக்கிழமை ‘புத்தகம் இல்லா நாள்’ என்று அறிவிக்கப்பட்டு, அந்த நாளில் நடனம், பறை, பேண்ட் வாசிப்பு, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.