

ஆசிரியர் நாள் ஓர் உயிர்ப்பான கொண்டாட்டமாகப் பள்ளிக்கூடங்களில் நிலைபெற்றுவிட்டது. பள்ளிகளில் பலவிதமாக கௌரவிக்கப்படும் ஆசிரியர்கள், மனமார விரும்பும் ஒரு விஷயம் உள்ளது. அதற்குப் பல பள்ளிகளில் நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் ஒரு வழக்கத்தை மாற்றிக்கொண்டால் போதுமானது.
மீறக்கூடாத சம்பிரதாயம்
ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, நாற்காலியில் உட்கார அனுமதிக்கப்படுவது இல்லை. இது எழுதப்படாத விதிமுறையாகவே இருக்கிறது. ஒரு வகுப்பின் கால அளவு குறைந்தபட்சம் 40 நிமிடங்கள். ஒருவர் ஒரு நாளுக்கு ஆறு வகுப்புகளாவது எடுக்க வேண்டியிருக்கும்.
பல பள்ளிகளில் ஆசிரியர் தொடர்ச்சியாக அத்தனை வகுப்புகளையும் எடுக்குமாறு அட்டவணை போடப்பட்டிருக்கும். அவர்கள் ஆசிரியர் அறையில் செலவிடும் இரண்டு 10 நிமிட இடைவேளைகளும் அரை மணி நேர உணவு இடைவேளையும்தான் ஓய்வுக்கான வாய்ப்புகள்.
தொடர்ச்சியாக ஆறேழு வகுப்புகள் இருப்பின், ஒரு வகுப்பைப் பாடம் நடத்துதல் அல்லாத வகுப்பாக ஒதுக்கீடு செய்யுமாறு தள்ளி வைக்கக் கோரலாம். ஆனால், அந்தச் சலுகையை நாள்தோறும் எதிர்பார்க்க முடியாது.
கரும்பலகையில் எழுதுவதும் அதை விளக்குவதும் உட்கார்ந்த நிலையில் சாத்தியமற்றவை. மாணவர்கள் உட்கார்ந்திருக்க ஆசிரியர்கள் நின்றுகொண்டே பாடம் நடத்துவதுதான் சரியான செயல்முறை.
இரு தரப்பினரும் தத்தம் பார்வை மட்டங்களால் ஒன்றிணைந்திருப்பது நிற்கும் நிலையில்தான் நிகழும். நின்றபடி பாடம் நடத்துவதைத் தங்கள் பணி சார்ந்த ஒழுங்காகவே உலகம் முழுவதும் ஆசிரியர்கள் மதிக்கின்றனர். ஆனால், அது ஒருபோதும் மீறக்கூடாத சம்பிரதாயமாக, இங்கு மாற்றப்பட்டிருப்பதுதான் பிரச்சினை.
பாட வேளையில் ஆசிரியர்கள் குறுக்கும் நெடுக்குமாக நடக்கலாமே தவிர, உட்கார முடியாது. விடைத்தாள் திருத்துதல் போன்ற எழுத்துவேலைகளின்போது உட்கார்வதைத் தவிர வேறு வழியில்லை.