

அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தொல்லியல், கல்வெட்டியல் ஆய்வுகள், பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் கடல்சார் வணிகம் குறித்தும், உலக நாடுகளுடன் தமிழர்கள் கொண்டிருந்த தொடர்புகள் குறித்தும் கூடுதலாக நாம் அறிந்துகொள்ளும் வகையில் புதிய பரிமாணங்களைத் திறந்துவைத்துள்ளன.
குறிப்பாக, ‘தமிழி’ (தமிழ் பிராமி) எழுத்து தொடர்பான பழைய கண்டறிதல்களும், எகிப்தில் அண்மையில் கண்டறியப்பட்ட புதிய சான்றுகளும், சங்ககாலத் தமிழகம் ரோமப் பேரரசுடன் கொண்டிருந்த வலுவான வர்த்தக உறவுகளை உறுதியாக நிறுவுகின்றன.
தனித்துவமான எழுத்து மரபு: தமிழி எழுத்து குறித்த பல இலக்கியச் சான்றுகள் நமக்கு முன்பே கிடைத்துள்ளன. தமிழை எழுதப் பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவம் குறித்த மிகப் பழமையான குறிப்புகள் சமண நூல்களில் காணப்படுகின்றன. ‘சமவாயங்க சுத்த’ என்ற சமண நூல், இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட 18 எழுத்து முறைகளில் ஒன்றாக ‘தாமிலி’ (Damili) என்கிற எழுத்து முறையைக் குறிப்பிடுகிறது.
அதுபோல் ‘லலிதவிஸ்தர’ நூல், 64 எழுத்து முறைகளின் பட்டியலில் திராவிட லிபியையும் சேர்த்துள்ளது. இதன் மூலம், தென்னிந்தியாவில் தமிழ் மொழிக்கே உரிய தனித்துவமான எழுத்து மரபு மிகத் தொடக்கத்திலேயே உருவானது தெளிவாகிறது.
தொல்லியல் சான்றுகள் இந்த இலக்கியக் குறிப்புகளுக்கு வலுச்சேர்க்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பகுதியில் நடைபெற்ற அகழாய்வுகளில் கண்டறியப்பட்டுள்ள தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், பொ.ஆ.மு. (கி.மு.) 685ஆம் ஆண்டுக்குரியவை என்று காலக் கணிப்பு முடிவுகள் (BETA600727) வெளிவந்துள்ளன.
இப்பானை ஓடுகள், இதுவரை தமிழி எழுத்தின் மிகப் பழமையான சான்றாகக் கருதப்பட்ட கீழடி (பொ.ஆ.மு.580) கண்டறிதல்களுக்கும் முந்தையவை. இதன் மூலம், தமிழகத்தில் எழுத்தறிவு வெகு காலத்துக்கு முன்பே தோன்றி, எளிய மக்களின் சமூக வாழ்க்கையில் புழக்கத்தில் இருந்தது உறுதியாகிறது.