

என் உரைகளைக் காட்சி ஊடகங்களில் பார்த்த சில இளைஞர்கள் என்னைப் புத்தகக்காட்சி போன்ற பொது இடங்களில் பார்க்கும்போது, “நீங்கள் ஆங்கிலத்தில் புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்களா?” என்று கேட்கிறார்கள். ஏன் என்று வினவினால், “தமிழ் படிக்கத் தெரியாது” என்கிறார்கள். பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது.
சமூக அழுத்தம்: என்னிடம் அப்படிச் சொன்னவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தான். ஆனாலும், அவர்களுக்குத் தமிழ் படிக்கத் தெரியாது. தமிழில் எழுதுவது குறித்தோ கேட்கவே வேண்டாம். கட்செவி (வாட்ஸ்அப்), மின்னஞ்சல் (இமெயில்), குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்.) போன்றவற்றில் எல்லாம் இவர்கள் ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார்கள் அல்லது தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்தில், ‘Nee variyaa’ (நீ வரியா) என்பதுபோல எழுதும் ‘தங்கிலிஷ்’தான் பயன்படுத்துகிறார்கள்.