

எதிர்காலத்தில் எது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பது குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துவருகின்றன. செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர்கள், மேம்பட்ட உற்பத்தி, டீப் டெக் போன்றவை குறித்து விரிவாக விவாதித்துவருகிறோம். ஆனால், அந்தத் தொழில்நுட்பங்களை யார் உருவாக்குவார்கள் என்பதைப் பற்றி குறைவாகவே பேசுகிறோம்.
பெண்களுக்கான களம்
இப்போது இந்த இரண்டு விவாதங்களும் தமிழ்நாட்டில் ஒன்றாக இணைந்துவருகின்றன. பொறியியல் திறமை, உயர்கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி நிறுவனங்கள் - தொழில் நிறுவனங்கள் என ஒரு வலுவான கட்டமைப்பைத் தமிழ்நாடு உருவாக்கியுள்ளது.
புதிய தொழில்நுட்பங்கள் பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டுக்குப் புதிய தலைமுறைப் பெண் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்குவதற்கான சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
2047ஆம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்கிற இந்தியாவின் லட்சியப் பயணத்துக்குத் தொழில்நுட்பம் ஒரு முக்கிய உந்துசக்தியாக இருக்கும். அதில் பெண்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள். ‘வளர்ந்த இந்தியா 2047’ திட்டத்தின் கீழ், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, பெண்கள் சக்தி ஆகியவற்றுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
இந்தியாவின் பொருளாதார - தொழில்நுட்ப வளர்ச்சியில் அறிவியலாளர்களாக, பொறியாளர்களாக, ஆராய்ச்சியாளர்களாக, தொழில்முனைவோராக, தலைவர்களாகப் பெண்கள் மிகப்பெரிய பங்கு வகிக்க முடியும் என்பதை இது உணர்த்துகிறது.
பங்கேற்பின் நன்மைகள்
பெண்களின் வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பைப் பொருளாதார ஒத்துழைப்பு - மேம்பாட்டு அமைப்பின் (OECD) ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தியாவுக்கு இதில் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.