

மனித சமூகம் எதனால் இயங்குகிறது என்று கேட்டால், கடவுளை மைய அச்சாகக் கொண்டு இயங்குகிறது என்று கருத்து முதல்வாதிகளும், மனிதனின் மறு உற்பத்தி மற்றும் உற்பத்தி உறவுகளால் இயங்குகிறது என்று பொருள் முதல்வாதிகளும் விளக்கம் கொடுப்பார்கள். அறிவியலாளர்களிடம் கேட்டால், நவீன அறிவியலின் புதிய புதிய கண்டுபிடிப்புகளால் உலகம் இயங்குகிறது என்று சொல்வார்கள். ஆனால் இலக்கியவாதியிடமோ, கலைஞர்களிடமோ கேட்டால், “இவ்வுலகம் எங்களின் படைப்புகளால் இயங்குகிறது” என்று தயக்கமின்றி சொல்வார்கள். காரணம், உலகை இயக்கும் விசை தங்களின் எழுத்துகளுக்கும் கலைகளுக்கும் இருக்கிறது என்ற உறுதியான நம்பிக்கையோடு அவர்கள் பேசுவார்கள்.
“உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. நவீன அறிவியல் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. வெறும் எழுத்துகளுக்கும், கலைகளுக்கும் இதில் என்ன வேலை இருக்கிறது?” என்று தொடுக்கப்படும் கேள்விக் கணைகளுக்கு பல நேரங்களில் பதிலேதும் சொல்லாமல் படைப்பாளர்கள், அந்தக் கணைகளை நெஞ்சில் வாங்கியபடி திகைத்து நிற்பார்கள். உலகமயத்திற்கு பிறகான பொருளியல் வாழ்க்கை தரும் நெருக்கடி, அவர்களின் உறுதியை குலைத்துப் போடுகிறது. ஆனால், வரலாறுசொல்லும் உண்மை என்ன தெரியுமா? நவீன அறிவியல்,தத்துவம் என்று எல்லாவற்றையும் கண்டுபிடிப்பவர்களுக்கு உந்துசக்தியாக இருப்பது, படைப்பாளர்களின் தீராத கனவுகளை சுமந்து வரும் படைப்புகள் மட்டுமே.