

விவசாயத்தையும் குலத் தொழில்களையும் அடித்தளமாக்கிய மன்னராட்சியில் சொத்துடைமையாளர்களுக்கு வழங்கப்பட்ட அரசியலதிகாரம் உழைப்பாளர்களுக்கும் பெண்களுக்கும் மறுக்கப்பட்டது.
பிரிட்டிஷ் இந்தியாவில் நவீனக் கல்வி, தொழில்கள் பரவலான நிலையில், பெண்களும் உழைப்பாளர்களும் அரசியலதிகாரத்தில் பங்கெடுக்க வேண்டிய அவசியத்தை சாதி - வர்க்க, பாலின, ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை பெறுவதற்கான இயக்கங்கள் உணர்த்தின.
இக்காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அரசியல் சீர்திருத்தத்தால் அரசாங்கத்துக்கு வரிகள் செலுத்திய சொத்துடைமை கொண்ட ஆண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
இந்தியாவில் 1918இல் நூற்றுக்கு ஆறு பேராக இருந்த வாக்காளர் வீதத்தை அதிகரிக்கவும், வாக்காளர்களுக்கு வரையறுக்கப்பட்ட வரியைக் குறைக்கவும் ஆலோசித்ததை ‘ஜனாபிமானி’ 1918 ஜூனில் பதிவுசெய்திருக்கிறது.
பம்பாயில் காங்கிரஸின் 1918 செப்டம்பர் கூட்டத்தில், ‘எந்தச் சீர்திருத்தங்களிலும் ஆணுக்கு வகுக்கப்பட்ட தகுதிகளைப் பெண்களும் பெற்றிருந்தால் பாலினத்தால் அவர்களை விலக்கக் கூடாது’ என்று தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில், இந்தியப் பெண்கள் வாக்குரிமை கோரினர்.
பிரிட்டனில் 1832இல் வாக்களிப்பதற்கான தகுதிகளைப் பெற்றிருந்தும் பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது; 1918இல் பிரிட்டன் பெண்கள் அதைப் பெற்றதால் தங்களுக்கும் வாக்குரிமை கிடைக்கும் என இந்தியப் பெண்கள் நம்பினர்.
மருத்துவம், சட்டம் என அனைத்திலும் திறமையுள்ள இந்தியப் பெண்களைப் பொது வாழ்க்கையிலிருந்து தடுக்கலாமா என பிரிட்டன் பெண் வாக்குரிமை சங்கத்தைச் சேர்ந்த ஆளுமையான ஃபாசெட் ஆதரவுக் குரல் எழுப்பினார்.
நான்கு அணா வரி
இந்தச் சூழலில், 1918 நவம்பர் 20 தேதியிட்ட சென்னை மாகாண அரசாங்க அறிக்கை வாக்குரிமை சார்ந்த கருத்துகளைக் கேட்டது. சொத்துடைமை, வீட்டுடைமை, வரி என உடைமைகளையே தகுதிகள் ஆக்கலாம் எனச் சிலர் கூறினர்.
அப்படிச் செய்தால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வாக்குரிமையை இழப்பர் என மதராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.பி.ராமன் மேனன் தெரிவித்தார். மேலும், இந்துப் பெண்கள் கல்வியில் குறைந்தவர்கள் அல்லர், கூட்டுக் குடும்பத்தில் பெண்களுக்கும் சொத்துரிமை இருப்பதாலும், பர்தா முறை இல்லாததாலும் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்றார் அவர்.
ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் இருப்பதாலும் வரி செலுத்தவும் வாக்களிக்கவும் அவர்களுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் அறிவு இருப்பதாலும் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்றார் சீர்திருத்தவாதியான வி.பாலம்மாள்.