

கோவையில் ஒரு கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உள்பட இந்த ஆண்டில் நிகழ்ந்த சில சம்பவங்கள், ‘தமிழ்நாடு பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமா?’ என்கிற விவாதத்தை உருவாக்கின. இதற்கு, முற்றிலும் ‘ஆம்’ என்றோ, ‘இல்லை’ என்றோ ஒற்றை வரியில் பதிலளிப்பது கடினம். புள்ளிவிவரங்களும், சமூகத்தின் அனுபவங்களும் இருவேறு கோணங்களைக் காட்டுகின்றன.
தரவுகள் சொல்வது: தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின் அடிப்படையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ச்சியாக 2018ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரை அதிகரித்து வந்துள்ளன. 2018 இல் 5,822 வழக்குகளாக இருந்தது, 2019இல் 5,934; 2020இல் 6,630; 2021இல் 8,507, 2022இல் 9,207 என அதிகரித்து வந்துள்ளது. கோவிட் பெருந்தொற்றுக் காலத்துக்கு முன் இந்தியாவில் 2019இல் 4,05,326 வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், 2020இல் 3,71,503 ஆகக் குறைந்தது. எனினும், தமிழகத்தில் வழக்குகளின் எண்ணிக்கை 11.7% உயர்ந்தது.
ஆனால், முதன்முறையாக, 2023இல் 3% குறைந்து 8,943 வழக்குகள் பதிவாகின. தேசிய சராசரியைப் பொறுத்தவரையில் பதியப்பட்ட வழக்குகளில் 80% இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழும், 20% சிறப்பு - உள்ளூர்ச் சட்டத்தின் கீழும் பதியப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில், இது முறையே 40%, 60% ஆக உள்ளது. பெரும்பாலான வழக்குகள் சிறப்பு - உள்ளூர்ச் சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. கணிக்கப்பட்ட மக்கள்தொகையின் அடிப்படையில், இந்தியாவில், தமிழ்நாடு ஏழாவது மாநிலமாக உள்ளது. ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றவிகிதம் (ஒரு லட்சம் பெண்களுக்கு) குறைவாக உள்ள முதல் ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடு நான்காவதாக இருப்பது பெருமைக்குரிய விஷயம்.
இந்தியாவில் பதிவான மொத்தப் பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை 29,670. இதில் 55% வெறும் ஐந்து மாநிலங்களில் பதிவாகியுள்ளன. ராஜஸ்தான் 5,078; உத்தரப் பிரதேசம் 3,516; மகாராஷ்டிரம் 2,930; மத்தியப் பிரதேசம் 2,979; ஹரியாணா 1,772. தமிழ்நாட்டில் 365 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. நம்மைவிட மக்கள்தொகை குறைவாக உள்ள கேரளத்தில் 843 வழக்குகள் பதிவாகி உள்ளன.