

ஒரு காலத்தில் அறிவுப் பரவலாக்கம், வாழ்க்கை நெறிகளை வளர்த்தெடுத்தல், தொழில்திறன் உருவாக்கம், சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் போன்றவை பல்கலைக்கழகங்களின் சமூகப் பொறுப்புகளாகக் கருதப்பட்டன.
இந்நிலையில், 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே பல்கலைக்கழகங்கள் வணிக வடிவம் பெற்று, சமூகத்தில் இருந்து வேகமாக விலகி வருகின்றன. இதையடுத்து, பல்கலைக்கழகம் என்பது ‘பட்டம்’ வழங்கும் நிறுவனம் மட்டும்தானா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
ஆழமும் விரிவும்... இன்றைய பல்கலைக்கழகங்கள் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில்லை. கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட தொழில்திறனைப் பயிற்றுவிப்பதாகவும், குறிப்பிட்ட பணிக்கு மாணாக்கர்களைத் தயார்படுத்துவதாகவும் சுருங்கிவிட்டது என்று முன்வைக்கப்படும் விமர்சனங்கள் நிதர்சனமானவை. சமூகத்தின் வளர்ச்சி வேகத்துக்கும் பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டுக்கும் ஒத்திசைவு இல்லை.
தொழில்நுட்ப வளர்ச்சி, சமூகத்தின் தேவை ஆகியவற்றுக்கு ஏற்பப் பாடத்திட்டங்களை வடிவமைப்பதும் அதற்கு இசைவாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதும் சவாலான விஷயங்கள்தான். ஆனால், அந்தச் சவாலை எதிர்கொள்ள இன்றைய பல்கலைக்கழகங்கள் தயாராக இல்லை.
பொதுவாக, இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்கு ஒரு முறையோ, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையோதான் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கின்றன. அதுவும் முழுமையாக இல்லை. சேர்க்கை - நீக்கம் என்கிற அளவிலே உள்ளது! இது ஏஐ யுகம்.
நாளுக்கு நாள் மாறிவரும் தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கற்றுக்கொள்வதற்கும், பரிசோதனை செய்து பார்ப்பதற்கும் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் இடம் இல்லை. பாடத்திட்டங்களை வகுப்பதில் பழைய கோட்பாடுகள், நடைமுறைகள், சிந்தனைப் போக்குகளில் இருந்து விடுபட முடியவில்லை.
உயர் கல்வியை மதிப்பீடு செய்ய அமைக்கப்பட்ட பல்வேறு வல்லுநர் குழுக்கள் முன்வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு ‘நமது பாடத்திட்டங்கள் உள்ளூர்ச் சிக்கல்களுக்குத் தீர்வு காண முயலவில்லை’ என்பதாகும்.