

மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் விதைச் சட்ட முன்வரைவு - 2025, சிறு, குறு உழவர்கள் மத்தியில் பெரும் பேசுபொருள் ஆகியிருக்கிறது. 35 பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த வரைவு அறிக்கை, விதைகளின் மீதான முழுமையான கட்டுப்பாட்டை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் வகையிலும், பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதாகவும் உள்ளது. மேலும் விதைத் துறையை உழவர்களின் வாழ்வாதாரத்தின் மையத்தில் இருந்து சந்தையின் மையத்துக்கு உந்தித்தள்ளும் வகையில் உள்ளது.
உழவர்களுக்கு நெருக்கடி: விதை என்பது வெறும் வேளாண் இடுபொருள் பண்டம் அல்ல; ஒரு நாட்டினுடைய உணவின் உயிர்மூச்சு. அது ஓர் உயிரியல் நினைவகம், பண்புக் கூறுகளின் மரபு, சூழலியல் அறிவு, வேளாண்மைத் தொழில்நுட்பம்; அனைத்துக்கும் மேலாக விதைகள் நமது அடையாளம். இதுவரை மத்திய அரசு விதைகளைப் பார்த்த பார்வையில் இருந்து மாறுபட்டு விதை என்பதை ஓர் இனப்பெருக்கப் பண்டம் (Propagating Material) என்று பார்க்கும் பார்வையை இந்தச் சட்ட முன்வரைவு தெரிவிக்கிறது.