

காலம் தனது தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொள்ளும் என்பதற்கேற்ப, காலத்துக்குத் தகுந்தாற்போல் வேளாண்மையின் தேவையைக் கட்டமைத்ததில் அரசியலுக்கும் அறிவியலுக்கும் பெரும்பங்கு உண்டு. இன்னும் சொல்லப்போனால் அரசியல், அறிவியல் ஆகியவற்றுடன் இணைந்த பின்புதான் வேளாண்மையின் மதிப்பு பரவலாக அதிகரிக்கத் தொடங்கியது. இதன் பின்னணியைத் தெரிந்துகொள்வது அவசியம்.
அறிவியலால் வளர்ந்த வேளாண்மை
1840களில் பயிர் வளர்ச்சிக்குக் கனிம ஊட்டச்சத்துகள் அடிப்படையானவை எனக் கண்டறிந்த ஜெர்மன் வேதியியலாளர் யூஸ்டூஸ் வான் லீபிக் (Justus von Liebig) முதல், 20ஆம் நூற்றாண்டில் பயிரின் விளைச்சல் - நோய் எதிர்ப்புத் தன்மையை வளப்படுத்திய கிரெகோர் ஜோஹன் மெண்டல் (Gregor Johann Mendel) வரை பலர் வேளாண் அறிவியலுக்குப் பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.
கிரெகோர் மெண்டலின் மறைவுக்குப் பின்புதான், அவர் கண்டறிந்த மரபுப்பேற்று விதிகளை (Mendel’s Laws of Inheritance) ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டனர். 1856–1863ஆம் ஆண்டுகளுக்கு இடையே 28,000 பட்டாணிச் செடிகளை ஆய்வுக்கு உட்படுத்தி வளர்த்ததுடன் செடிகளின் உயரம், இலைகளின் தோற்றம், பூக்களின் நிறம், விதைகளின் வீரியம், செடிகளின் ஆரோக்கியம் ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்து அவற்றின் விவரங்களையும் சேகரித்தார்.
எவ்வாறு ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்குப் பண்புகள் கடத்தப்படுகின்றன என்பதை மூன்று விதிகளின் அடிப்படையில் கண்டறிந்தார். முதலாவதாக, பல தலைமுறைகள் வாழ்ந்த உயரமான பட்டாணிச் செடியையும், அதிக உயரம் இல்லாத பட்டாணிச் செடியையும் கொண்டு செயற்கையாக மகரந்தச் சேர்க்கை செய்தபோது, நாளடைவில் அதில் உயரமான பண்பு கொண்ட பட்டாணிச் செடிகள் வளர்ந்ததை வைத்து ‘ஆதிக்க விதி’யைக் கண்டறிந்தார்.
அடுத்து, ஆதிக்க விதியில் கண்டறியப்பட்ட உயரமான செடிகளின் விதைகளை விதைத்துத் தன்னிச்சையாக மகரந்தச் சேர்க்கை ஆனபோது அதன் இரண்டாம் தலைமுறையில் மூன்று உயரமான செடிகளும், உயரம் குறைந்த ஒரு செடியும் கிடைத்ததை வைத்து ‘பிரிதல் விதி’யைக் கண்டறிந்தார். இதன் மூலம் முதல் தலைமுறையில் ஆதிக்கம் செலுத்தாத குறுகிய பண்பானது அழியாமல் இரண்டாம் தலைமுறையில் தோன்றியதைக் கண்டறிந்தார்.
பின்னாளில், மெண்டல் விதிகளுக்கு உட்படாத மரபுப்பேற்று விதி உருவானாலும் அவர் காட்டிய பாதையில் தற்போதும் உயிரித் தொழில்நுட்பம் வழியே வேளாண் ஆய்வாளர்கள் பயணிக்கிறார்கள்; உணவு தானியங்கள், தீவனம், நார் உற்பத்தியை அதிகரிக்க வைத்திருக்கிறார்கள்.