

சரியாக 178 ஆண்டுகளுக்கு முந்தைய, இந்தியச் சமூகம் அது. ‘ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை’ என்று எண்ணப்பட்ட காலம். அப்போது, சாதி இந்து ஆண்கள் மட்டுமே பள்ளிக்கூடம் போய்ப் படிக்க முடியும். பெண்களின் நிலையோ படுமோசமாக இருந்தது.
அவமதிப்பும் வைராக்கியமும்: இந்தச் சூழலில்தான், 1848இல் மராட்டிய மாநிலம், அருகிலுள்ள பிடேவாடாவில், அந்த 17 வயதுப் பெண், பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கூடம் ஒன்றை, தானும் கணவருமாகச் சேர்ந்து உருவாக்கியிருந்த மகிழ்ச்சியில், பள்ளிக்கூடத்துக்கு விரைந்துகொண்டிருந்தார். ஆனால், “ஒரு பெண் பள்ளிக்கூடம் போவதா? அதுவும் பாடம் நடத்துவதா... கூடாது!” என்று வழிமறித்தனர் சிலர். சகதியும் சாணமும் அழுகிய முட்டைகளும் கற்களோடு வந்து விழுந்தன.