

சங்க இலக்கியத்தில்...
சங்க இலக்கியத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து, உணவு, உடை, உறைவிடம் இம்மூன்றையும் அடிப்படைத் தேவையாகக் கருதிப் பாடியுள்ளது.
குமட்டூர்க் கண்ணனார் என்னும் புலவர் தன் பாடலில் ‘தொல்பசியுழந்த பழங்கண்’ என்று பசியையும், ‘நூலாக் கலிங்கம்’ என்று உடையையும், ‘குன்று பல நீந்தி வந்து அவர் இறுத்த இரும்பேர்’ என்று உறைவிடத்தையும் பாடியுள்ளார். சேரலாதன் நெடுஞ்செழியனின் மறம் வீங்கு பல்புகழைப் பாடும் பாடல் இது.
சேர மன்னன் சேரலாதனின் உதவியை நாடி ஒரு புலவர் தன் சுற்றத்தாருடன் வருகிறார். அவர்களின் ஆடைகள் மழையில் நனைந்த பருந்தின் சிறகைப் போலவும் மண்ணால் அரிக்கப்பட்ட கந்தையாகவும் இருக்கின்றன.
கிழிந்த ஆடையுடன் வந்த சுற்றத்தாருக்குச் சேரலாதன் உடை கொடுக்கிறார். அது பட்டு ஆடை. இடுப்புக்கும் தோளுக்கும் கனக்காத மெல்லிய ஆடை. அத்துடன் அவர்கள் தங்கிக்கொள்ள உறைவிடம் கொடுக்கிறார்.
அவர்களின் பசி, பல நாள் உணவின்மையால் உண்டான கொடும்பசி. கொடும்பசியைப் புலவர் ‘தொல்பசியுழந்த பழங்கண்’ என்கிறார். பழங்கண் என்பது துன்பம். சேரன் அவர்களுக்கு உணவு கொடுக்கிறார்.
அந்த உணவு ‘மைஊன் பெய்த வெண்ணெல்’ வெண் சோறாக இருக்கிறது. மைஊன் என்பது ஆட்டு இறைச்சி. வெண்ணெல் என்பது மலை நெல். இப்படியாகப் பதிற்றுப்பத்து உணவு, உடை, உறைவிடம் என்னும் மூன்று அடிப்படைத் தேவைகளைப் பாடியுள்ளது.
தேர்தல் அறிக்கையில் கலோரி
வெண்சோறு என்பது நெல்லைப் போரடிக்கும் களத்திலிருந்து காலத்தோடு கொள்முதல் செய்வதில் இருக்கிறது. போரடிக்கும் களத்திலிருந்து நெல்லைக் கொள்முதல் செய்யும் நாள்களுக்குக் காலம் நிர்ணயிக்கும்படியான வாக்குறுதிகள் இடம்பெற வேண்டும்.
இயற்கை விவசாயத்துக்கு உழவர்களைத் திருப்பும்படியான வாக்குறுதிகள் அதிகம் இடம்பெற வேண்டும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தினை வகைகள், கவுனி அரிசி போன்றவை நியாய விலைக் கடைகளில் கிடைக்க வேண்டும்.