

பீட்டர்ஸ்பர்க் வீதியின் எதிர்காலத்தை மாற்றி எழுதக்கூடிய பல நிகழ்வுகளுடன்தான் ஜார் மன்னன் ஆண்ட ரஷ்ய சாம்ராஜ்யத்தில் 1905ஆம் ஆண்டு பிறந்தது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் வீரியம்மிக்க தொழிலாளர் போராட்டங்கள், ஜனவரி 9 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜார் மன்னனின் காவல் துறையும் ராணுவமும் நடத்திய துப்பாக்கிச்சூட்டுடன் முடிந்தன.
பனி மூடிய பீட்டர்ஸ்பர்க்கின் வீதிகள் சாமானிய மக்களின் குருதியால் சிவந்தன. ஜார் மன்னர் கருணை நிறைந்தவர் என்று நம்பியிருந்த மக்கள் அதிர்ச்சியுற்றனர்; கிளர்ச்சியில் இறங்கினர். ‘ரத்த ஞாயிறு’ என்று அந்த நாள் வரலாற்றில் குறிக்கப்படுகிறது. ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான போரில் ஜப்பான் தொடர்ந்து வெற்றியடைந்து கொண்டிருந்தது. கொரியக் கடற்பகுதியில் ரஷ்யக் கடற்படை அணி ஒன்றை ஜப்பான் முற்றிலும் நாசப்படுத்தியது.