

கடந்த டிசம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள ‘விக்ஷித் பாரத் ஜி ராம் ஜி’ (VB–G RAM G) சட்டம், 2025’ இந்தியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத்தில் ஒரு பேரிடியாக இறங்கி இருக்கிறது.
‘நூறு நாள் வேலை என்பதற்குப் பதிலாக 125 நாள் வேலை’ என்ற அறிவிப்பு எளிய மக்களுக்குக் கூடுதலான வேலைவாய்ப்பை அளிப்பதுபோலத் தோன்றலாம். ஆனால், வேலை நாள்களை அதிகரிப்பது என்கிற பெயரில், வேலை உரிமை என்ற நிலையை முற்றிலுமாக நீக்குவதற்கான முயற்சி இது என்றுதான் பேசப்படுகிறது.
அடிப்படை மாற்றம்: 2005இல் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் (MGNREGA), இந்திய ஜனநாயகத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருந்தது. உடல் உழைப்புக்குத் தயாராக இருக்கும் ஒவ்வொரு கிராமப்புற நபருக்கும் வேலை பெறுவது ஒரு சட்ட உரிமை என்று உறுதிசெய்தது.
‘வேலை வேண்டும்’ என்று கோரினால், 15 நாள்களுக்குள் வேலை வழங்கப்பட வேண்டும்; இல்லையெனில் ‘வேலை இல்லாப் படி’ வழங்கப்பட வேண்டும் என்பதே அதன் மையக் கொள்கை. மேலும், வேலைத் திட்டங்கள் கிராம சபை, ஊராட்சி நிர்வாகம் வழியாகக் கீழிருந்து மேலாக உருவாக்கப்பட வேண்டும் என்பதே அதன் ஜனநாயக வழிமுறை.
புதிய சட்டம், இந்த அடிப்படைப் பண்புகளையே மாற்றுகிறது. இனி வேலை என்பது ‘நான் கோருகிறேன்; அரசு தர வேண்டும்’ என்ற உரிமை நிலைக்கு மாறாக, மத்திய அரசு அறிவிக்கும் பகுதிகளில் மட்டுமே வேலை வழங்கப்படும் எனக் கூறுகிறது.