

தேர்தல் வரும்போதெல்லாம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து ‘தேர்தலைப் புறக்கணிக்கிறோம்’ என்கிற குரல் சில இடங்களில் ஒலிப்பதைப் பார்க்கிறோம்.
சுவரொட்டிகளாக, பதாகைகளாக ஒலிக்கும் அந்தக் குரல் யாருடையது, அவர்கள் சமூகத்துக்கு என்ன சொல்ல வருகிறார்கள், அவர்களின் உளவியல் என்ன என்பன போன்ற கேள்விகளின் அடிப்படையில் யோசிக்கும்போது மனிதர்களின் இருத்தல், சமூகத்தின் இயங்கியல் ஆகியவற்றின் மீது ஒரு மறுமதிப்பீட்டுத் தேவை இருப்பதை உணர முடியும்.
சர்வதேச அளவில் மிகப்பெரிய கட்சிகளும் அமைப்புகளும் தேர்தலைப் புறக்கணித்ததற்கான அரசியல், பொருளாதாரக் காரணங்கள் ஆராயப்பட்டு இருக்கின்றனவே அன்றி, சொற்ப எண்ணிக்கையில் திரளும் உள்ளூர் மக்களின் புறக்கணிப்பு குறித்த ஆய்வுகளோ கவனப்படுத்தலோ அவ்வளவாக இல்லை.
வாக்கும் வாக்காளரும்
ஜனநாயகத்தின் இயங்கியலில் குடிமக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் வழிகளைப் பற்றி அரசியல் நோக்கரும் பொருளாதார அறிஞருமான ஆல்பெர்ட் ஓ.ஹிர்ஸ்மென் (Albert O. Hirschman) தன்னுடைய ‘விலகுதல், குரல், விசுவாசம்’ (Exit, Voice, and Loyalty) நூலில் விளக்கியிருக்கிறார்.
மக்கள் அதிருப்தியை எதிர்கொள்ளும்போது அமைப்பைவிட்டு விலகுதல் (exit) அல்லது அதன் உள்ளேயே இருந்துகொண்டு குரல் எழுப்புதல் (voice) ஆகிய இரண்டு வழிகளில் செயல்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அந்த விளக்கத்தின்படி தேர்தல் புறக்கணிப்பு என்பதை விலகுதல், உள்ளுக்குள் இருந்தே குரல் எழுப்புதல் என்னும் இரண்டு நிலைப்பாடுகளின் கலவையாகக் கருதலாம். ஜனநாயகத்தில் ‘வாக்கு’ (Vote) குடிமக்களின் முக்கியமான அரசியல் கருவி. அது ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆயுதம் மட்டுமல்ல; குடியுரிமையை உறுதிசெய்யும் சான்றும்கூட.
அதாவது, ஒரு நாட்டின் வாக்காளர் என்பவர் வாக்கு அளிப்பவர் என்பதைத் தாண்டி, அந்த நாட்டின் உரிமையாளரும் ஆகிறார். அந்த ‘உரிமை’ என்கிற எண்ணம் அவரின் இருப்பாக, இயக்கமாக அவரை உணர வைக்கிறது. அதன் வழி அவர் நாட்டுப்பற்று, இறையாண்மை ஆகியவற்றுடன் நெருக்கமாகிறார்.
ஆக, தேர்தல் அரசியலில் பங்கெடுத்தலுக்கான வாய்ப்பு / வழி என்பதற்கு அப்பாற்பட்டு ஒருவரின் இருத்தலுக்கான உணர்வோடும் உரிமையோடும் தொடர்புடையதாக வாக்குரிமை இருக்கிறது.
‘வாக்கு’ என்பதில் தொடங்கும் அந்த உணர்வு ரேஷன், நலத்திட்டம், கல்வி, சொத்து, வாரிசு என்பதாக நீண்டு வாக்களிக்கத் தகுதியுடைய அனைவருக்குள்ளும் ஊடுபாவாகப் பரவி, அவர் தம் உரிமையை நிலைநாட்டுகிறது.