பேரவைத் தேர்தல் 2026: பொதுப் போக்குவரத்து வசதியும் சமூக நீதியும்

பேரவைத் தேர்தல் 2026: பொதுப் போக்குவரத்து வசதியும் சமூக நீதியும்
Updated on
3 min read

“பேருந்து கிடைக்க 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம்வரை ஆகும். நான் தினமும் வீடு திரும்பும்போது இரவு 9.30 மணி ஆகிவிடும்” என்கிறார் சேலம் மாவட்டத்தில் பூ விற்பனை செய்யும் மாரியம்மாள் (45). இதன் காரணமாக, வீட்டு வேலைகளை எல்லாம் முடித்த பிறகு, நள்ளிரவில்தான் அவரது அன்றைய நாள் முடிகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் 50 வயதான ஆறுமுகம் பேருந்தில் ஏற முயன்றபோது கீழே விழுந்ததில் அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது. “உயர்தளப் பேருந்துகள் எளிதில் ஏற முடியாதவையாக உள்ளன” என்கிறார் அவர்.

40 வயதான சிவரஞ்சனிக்கு, இலவசப் பேருந்துகள் வரவேற்கத்தக்க முன்னெடுப்பாக இருந்தாலும், சமீபத்தில் அவற்றை அவர் தவிர்க்கத் தொடங்கியுள்ளார்.

“பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இலவசப் பேருந்துகள் மிகவும் நெரிசலாக உள்ளன. நாள் முழுதும் வேலை செய்வதால் களைப்படைந்து திரும்பும்போது, உட்கார இடம்கூடக் கிடைக்காது” என்கிறார் அவர்.

சென்னையைச் சேர்ந்த ஆர்.பாலசந்தர் (89), சுமார் 10 கி.மீ. தொலைவில் வசிக்கும் தனது மகள்களைச் சென்று பார்ப்பதை நிறுத்திவிட்டார். “நடைபாதைகள் இல்லாததால், அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்கு நடந்து செல்வதுகூடப் பயமாக இருக்கிறது. சாலையில் வேகமாகச் செல்லும் கார்களால் பல நேரம் விபத்து ஏற்படுகிறது” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

முக்கியமான காரணிகள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இவ்வேளையில், நிலைத்த போக்குவரத்து வசதி என்பது கவனம் குறைந்த பிரச்சினை அல்ல, மாறாக, சமத்துவம் - சமூக நீதியை அடைவதற்கு முக்கியமானது என்பதை அரசியல் கட்சிகள் உணர வேண்டும். இது மாநிலத்தின் பெரும்பான்மையான வாக்காளர்களுக்கான சமத்துவ உள்கட்டமைப்பு வசதியாகும். பாதுகாப்பான, நம்பகமான போக்குவரத்து வசதி இல்லாமல், மக்கள்நல வாக்குறுதிகள் முழுமையடையாது.

மாநிலம் முழுவதும் உள்ள பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் எனப் பலரும் அன்றாடப் பயணங்களுக்குப் பொதுப்போக்குவரத்து வசதியையும் நடந்துசெல்வதையுமே பெரிதும் நம்பியுள்ளனர்.

நீண்ட நேரம் வேலை செய்வது, கல்வி கற்பது, குடும்பங்களைப் பராமரிப்பது, பொதுவாழ்க்கையில் பங்கேற்பது போன்றவை பொதுப்போக்குவரத்து வசதிகளின் தரம், தெருக்களின் பாதுகாப்பு ஆகியவற்றைப் பொறுத்தே அமைகின்றன.

சேவைகள் அணுக முடியாதவை ஆகும்போது, பயண வாய்ப்புகள் குறைகின்றன. எனவே, நடைபாதைகள் அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடும் என்று சொல்வது மிகையாகாது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in