

கடந்த சில ஆண்டுகளாக, வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும்போதெல்லாம் சென்னை முதல் கன்னியாகுமரிவரை மழை வெள்ளம் ஏற்படுகிறது. ஏறத்தாழ 41,127 குளங்கள் மூலம், 347 டி.எம்.சி கொள்ளளவைக் கொண்ட தமிழ்நாட்டில், எப்படி வெள்ளப்பெருக்குகள் அடிக்கடி நிகழ்கின்றன? பெய்யும் மழையின் அளவைவிட, மழைநீரைச் சேமித்துவைத்து வெள்ள அபாயத்தைத் தடுக்கும் நம் பாரம்பரிய நீர்நிலைகளான குளங்களின் இன்றைய பரிதாப நிலையே முக்கியக் காரணம்.
நீர்ப்பிடிப்புப் பகுதிகள், மழைநீரை எடுத்துச்செல்லும் வாரி, வாய்க்கால்கள், நீர்ப்பரப்புப் பகுதிகளில் நடைபெறும் தொடர் ஆக்கிரமிப்பாலும், குளங்களைச் சரிவர ஆழப்படுத்திச் செம்மை செய்யாத காரணத்தாலும், அவற்றின் கொள்ளளவு குறைந்து, ஒரு பெருமழைக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் வெள்ளம் ஏற்பட்டுவிடுகிறது.