

எல்லா விளையாட்டுகளுக்கும் உலகக் கோப்பைகள் நடத்தப்பட்டாலும், விளையாட்டைப் பொறுத்தவரை உண்மையிலேயே ‘உலகம்’ என்கிற சொல் அர்த்தம் பெறுவது என்னவோ கால்பந்து உலகக் கோப்பையில் மட்டும்தான்.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை கிரிக்கெட் முற்றிலும் காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டாகவே இருந்தது. ஹாக்கி என்று சொன்னால் வட அமெரிக்கர்களுக்கு ‘ஐஸ் ஹாக்கி’தான் முதலில் நினைவுக்கு வரும்.
அமெரிக்காவில் பிரபலமான பேஸ்பால், அமெரிக்கன் ஃபுட்பால் ஆகிய விளையாட்டுகளுக்குப் பிற நாடுகளில் பெரிய வரவேற்பு இல்லை. இப்படி ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு குறிப்பிட்ட எல்லை உண்டு. கால்பந்து உலகக் கோப்பையில் அப்படி இல்லை.
இந்தத் தொடரில் அத்தனை கண்டங்களைச் சேர்ந்த நாடுகளும் பங்கேற்கின்றன. உலக வரைபடத்தின் மூலைமுடுக்குகளில் இருக்கும் நாடுகளும்கூட இத்தொடரின் மூலமாக அடையாளம் பெறுகின்றன.
அதனால்தான் ஃபிஃபா உலகக் கோப்பை நடக்கும்போது ஒட்டுமொத்த உலகமுமே கொண்டாட்டத்தில் மிதக்கிறது. தற்போது அந்தக் கொண்டாட்டம் வட அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது.
அனைவருக்குமான விளையாட்டு
எல்லைகள் கடந்து இந்த விளையாட்டு விரிவடைந்து இருப்பதற்கான காரணம், இது எளிமையான விளையாட்டாகவும் எளியவர்களின் விளையாட்டாகவும் இருந்ததுதான்.
கால்பந்தின் விதிகள் எளிமையானவை - ஒரு கோல் போஸ்ட்டுக்குள் பந்தை அடிக்க வேண்டும். ஒரேயொரு பந்து இருந்தால் போதும். வேறு எந்த முதலீடும் தேவையில்லை. அதனால்தான், இந்த விளையாட்டைப் பெரும்பாலோர் அரவணைத்தார்கள்.
பஞ்சம் சூழ்ந்த காலத்தில் ஏழைகள் தங்கள் குழந்தைகள் பசியை மறப்பதற்கு, துணிகளைச் சுற்றிப் பந்தாக்கி வீதிகளில் விளையாடவைத்தனர். ஆப்ரிக்காவின் பல தேசங்களில் இன்றும் பசியை மறக்கவும் வலியை மறக்கவும் பந்துகளை உதைத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.
நெல்சன் மண்டேலா சிறைபட்டிருந்த ராபன் தீவு சிறைச்சாலையில், கைதிகளின் நலனுக்காக ஒரு கால்பந்து சங்கமே அமைக்கப்பட்டிருந்தது அதேவேளை, கால்பந்து வெறும் உணர்வுகளோடு கலந்த ஒரு விளையாட்டாக மட்டுமே இருந்திடவில்லை.
அது உழைக்கும் வர்க்கத்துக்கான ஆசுவாசமாகவும் அடையாளமாகவும் விளங்கியது. அங்கே அரசியலும் பேசப்பட்டது. இன்று புகழ்பெற்ற ஒரு கிளப்பாக விளங்கும் இங்கிலாந்தின் ஆர்சனல், ஆயுதத் தொழிற்சாலை ஊழியர்களால் தோற்றுவிக்கப்பட்டது. மான்செஸ்டர் யுனைடெட் அணியோ ரயில்வே நிறுவன ஊழியர்களால் தொடங்கப்பட்டது.