அண்மையில் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணின் ‘புதுப்புனல்’ நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். 14 புதிய தலைமுறை எழுத்தாளர்களின் சிறுகதைகள் மற்றும் புனைவுலகு குறித்தும், அந்தந்த தொகுப்புகளின் பலம், பலவீனங்கள் பற்றியும் துல்லியமாக எழுதப்பட்டிருந்தது.
அதை வாசிக்கும்போது 2010க்குப் பிறகான காலகட்டத்தின் கவிதைகள், கவிஞர்கள் குறித்தும் விரிவாக ஒரு நூல் உருவானால் எப்படியிருக்கும் என்ற ஏக்கமும், ஏன் அவ்வாறு உருவாகவில்லை என்ற கேள்வியும் எழுந்தன. ஆண்டுதோறும் மிக அதிக எண்ணிக்கையில் கவிதைத் தொகுப்புகள் வெளிவரும் சூழலில் குறைந்தபட்சம் பத்து தொகுப்புகளாவது கவிதைகளின் உயிரனுபவத்தை அளிக்கும் வகையில் இருக்கின்றன என்று சொன்னாலும், அவற்றைக் குறித்த அறிமுகமும் மதிப்புரைகளும் மிகமிகக் குறைவாகவே இருக்கின்றன.
கவிதை காலத்தை வெல்லும் வல்லமை கொண்டது, தானாகவே நிலைநிறுத்திக்கொள்ளும் என்பதெல்லாம் சரிதான். ஆனாலும் ஒரு கவிதை ஏன் ஆச்சரியமளிக்கிறது, ஏன் தொந்தரவு செய்கிறது, உட்சபட்ச கவிதையனுபவம் தருகிறது என்பதை, சில கவிஞர்களைத் தவிர, எழுதி அதனைப் பொருட்படுத்தத் தக்கதாக மாற்ற எவரும் முயல்வதில்லை. சிறு குழுக்களுக்குள் மட்டுமே அவை பகிரப்பட்டு உரையாடப்படுகின்றன. நல்ல வாசிப்பனுபவத்தை அளிக்கும் கவிதைகள் அறிமுகம் செய்யப்பட்டால்தான் வாசகர்கள் மொழியை நோக்கி வரும் சூழல் உருவாகும்.