

உலக அளவில் அறிவியல் தொழில்நுட்பத்திலும் இணைய வளர்ச்சியிலும் - செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திலும் இந்தியா அடைந்துவரும் உயரங்கள் அனைவரும் அறிந்தவை. ஆனால், மனிதர்களின் மலத்தைச் சக மனிதர்கள் அள்ளுவதும் அதனால் ஏற்படும் மனித உயிர்களின் இழப்புகளும் இன்னமும் முற்றுப்பெறவில்லை.
சட்டமும் நிதர்சனமும்
இந்த அவலத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் பல்வேறு தருணங்களில் கண்டனம் தெரிவித்த நிலையில், 1993இல் ‘சஃபாயி கர்மச்சாரி’ சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் நீட்சியாக, கடந்த 2013இல் கையால் மலம் அள்ள மனிதர்களைப் பணியமர்த்துவதைத் தடுக்கும் சட்டம் - மறுவாழ்வுச் சட்டத்தை (The Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Act, 2013) மத்திய அரசு கொண்டுவந்தது.
மனிதக் கழிவுகளைக் கையால் அள்ளுவது; மலக்குழியில் - கழிவுநீர்த் தொட்டியில் இறங்கிச் சுத்தம் செய்வதைக் குற்றமாகக் கருதும்படியும், அதில் ஈடுபடுத்தியவர்கள் மீது குற்ற வழக்கு பதிவுசெய்யும் வகையிலும் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேவேளையில், இப்படி ஒரு சட்டம் இருக்கும் நிலையிலும் இந்த அவலம் தொடரத்தான் செய்கிறது.
இதுகுறித்துப் போதுமான விவாதங்கள் பொதுச் சமூகத்தில் எழவேயில்லை. மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றுவது குற்றமாகக் கருதப்படாமல், அது வேலையாகவே கருதப்படுகிறது. எளிய மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கொண்டுவரப்பட்ட சட்டம், முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இச்சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு 2013இல் ரூ.6.35 கோடி ஒதுக்கியது. எனினும், 2014 - 2015, 2015 – 2016, 2016 - 2017 ஆகிய நிதி ஆண்டுகளில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என மத்திய சமூக நீதி - மேம்பாட்டுத் துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
2016-17இல் ரூ.5 கோடியும், 2021-22இல் ரூ.39 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள துப்புரவுத் தொழிலாளர்களை மேம்படுத்த இந்தத் தொகை போதுமானதாக இல்லை.