

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற என்.எஸ். பிரேமா எழுதிய ‘திருக்குறள் தெள்ளமுதம்’ புத்தக வெளியீட்டு விழாவுக்குப் பேச அழைத்திருந்தார்கள். அது நூலாசிரியரின் முதல் புத்தகம்.
ஆசிரியரைப் பார்த்து, “இன்று பிறந்தநாள் காணும் உங்களுக்கு வாழ்த்துகள். உங்கள் மகள்கள் உங்களைத் தாயாக்கினார்கள்; நீங்கள் எழுதிய புத்தகம் உங்களை நூலாசிரியர் ஆக்கியிருக்கிறது. முதுகலைப் பட்டம் பெற்று, பணிபுரிந்து, தற்போது ஓய்வுபெற்றிருக்கும் உங்களுக்குக் கிடைத்திருக்கும் புதிய பட்டம் இது. படித்துப் பெறும் பட்டங்கள் ஒருவகை என்றால், எழுதிப் பெறும் பட்டம் தனி வகை. தன் ஆயுளுக்குப் பிறகும் வாழப்போகும் உங்களுக்கு மீண்டும் என் வாழ்த்துகள்.
திருவள்ளுவர், கம்பர், மகாத்மா காந்தி, ஷேக்ஸ்பியர், லாவோ சூ போன்ற பெருமக்கள் மறைந்து பல நூறாண்டுகள் கடந்தும், தங்கள் படைப்புகள் வழியே நம்மோடும் வருங்காலத் தலைமுறையோடும் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். படைப்பாளிகளுக்கு இரண்டு பிறப்புகள்—மனிதனாக ஒன்று, ஆசிரியனாக மற்றொன்று. திருவள்ளுவர் போன்றோர்க்கு இந்த இரண்டாம் பிறப்பின் ஆயுள் சில ஆயிரம் ஆண்டுகள்” என்றேன்.
தொடர்ந்து, “தமிழில் புத்தகங்கள் அதிகம் விற்பதில்லை என்ற வருத்தம் உண்டு. மேலைநாடுகளில் நடிகர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் இணையான வரவேற்பும் வருமானமும் எழுத்தாளர்களுக்கு இருப்பது உண்மைதான். ஆனால், எல்லோரும் எழுத்து மூலமே பிழைக்க வேண்டும் என்பதில்லை.
தமிழின் சிறந்த எழுத்தாளர்கள் பலர் பகுதிநேர எழுத்தாளர்களே. மேலாண்மை பொன்னுசாமி சைக்கிளில் பாத்திரங்கள் விற்றவர்; அசோகமித்திரன் ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றியவர்; ‘சாயாவனம்’ சா.கந்தசாமி போர்ட் டிரஸ்டில் வேலை பார்த்தவர்; ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக ஊழியராகத் தொடங்கியவர்; சுஜாதா பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலும், பாலகுமாரன் டாஃபே நிறுவனத்திலும் பணியாற்றியவர்கள்.