

படைப்பிலக்கியங்கள் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என நான்கு வடிவங்களில் எழுதப்பட்டாலும் அனைவருக்கும் பிடித்த வடிவமாக நாவல்தான் இருக்கிறது. சிறுகதையும் நாவலும் புனைகதை என்ற ஒரே பெயரால் அழைக்கப்பட்டாலும் இரண்டும் வெவ்வேறு வடிவங்கள். காப்பிய மரபின் தொடர்ச்சி நாவலுக்குள் செயல்படுகிறது. கதைத் தொடர்ச்சிதான் இந்த வடிவத்தைப் பலரும் விரும்புவதற்குக் காரணமாக இருக்கிறது. உலகம் முழுக்க படைப்பிலக்கியத்தின் சாதனையாக எழுத்தாளர்கள் நாவலையே கருதுகின்றனர்.
தமிழ்ச்சூழலும் அப்படித்தான் இருக்கிறது. ஒரு நாவலுக்குக் கிடைக்கும் உடனடி அங்கீகாரம் பிற படைப்பிலக்கிய வடிவங்களுக்குக் கிடைப்பதில்லை. கவிதை, சிறுகதை என நகரும் ஒரு படைப்பாளர், நாவல் எழுதிவிட்டுத்தான் ஆசுவாசம் அடைகிறார். நாவல் இலக்கியத்துக்குத்தான் அதிக போட்டிகளும் நடத்தப்படுகின்றன. போட்டிகளுக்காக எழுதப்படும் நாவல்கள் ‘உற்பத்திச் சரக்கு’ என்ற இடத்தைத்தான் அடைகின்றன. பத்தாயிரம் ரூபாய் பரிசாக அளிக்கப்படும் நாவல் போட்டிகளுக்குக்கூட நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள் வந்துசேர்ந்ததாகப் போட்டி நடத்துநர்கள் பெருமிதம் அடைகிறார்கள்.