

மருத்துவ உலகில் இன்றைக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்ற தொற்றா நோய்களே (Non Communicable Diseases). வேறு எப்போதும் இல்லாத அளவுக்கு இளவயது மரணங்களும், இளம்வயதிலேயே நோய் பாதிப்புகளும் தொடர்ச்சியாக அதிகரித்துவருவதற்கு இந்தத் தொற்றாநோய்களே முதன்மைக் காரணங்களாக இருக்கின்றன. அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இவை மிகப்பெரும் சவாலாக இருக்கின்றன.
ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு...
உலக சுகாதார நிறுவனம் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற தொற்றாநோய்களால் ஏற்படக்கூடிய மரணங்களை 2030ஆம் ஆண்டுக்குள் மூன்றில் ஒரு பங்கு குறைக்க வேண்டும் என்பதை நிலைத்த வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாகக் கருதுகிறது.
தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘ஸ்டெப் சர்வே’ என்னும் சமூக ஆய்வில் மூன்றில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தமும், ஆறு நபர்களில் ஒருவருக்குச் சர்க்கரை நோயும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதயம் / மூளையின் ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளுக்குச் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் ஆகியவை முக்கியக் காரணங்களாக உள்ளன.
பக்கவாதம், மாரடைப்பு, தீவிரச் சிறுநீரகச் செயலிழப்பு போன்ற அதிதீவிர நோய்களால் இளம் வயதில் / நடுத்தர வயதில் ஏற்படும் மரணங்களைத் தடுக்க வேண்டும் எனில், சமூகம் சார்ந்த பல்வேறு விதமான முன்னெச்செரிக்கை நடவடிக்கைளை நாம் மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான எதிர்காலச் சந்ததியினரை உருவாக்க வேண்டுமானால் நீண்ட நாள்களுக்கு இலக்கைக் கொண்ட தெளிவான சுகாதார நடவடிக்கைகளை இப்போதே தொடங்கியாக வேண்டும்.
உணவும் மருந்தும்
தாயின் கருவறையில் இருக்கும்போதே மனிதர்களின் ஆரோக்கியமான நல்வாழ்வு தொடங்கிவிடுகிறது. கர்ப்ப காலத்தில் ஒரு தாய் ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொள்ளும் புரத உணவின் அளவு கருவறையில் குழந்தையின் வளர்ச்சியை மட்டுமல்ல, பின்னாளில் ஏற்படும் சர்க்கரை நோய், உடல்பருமன் போன்றவற்றையும் தீர்மானிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
இதைக் கருத்தில் கொண்டே தமிழக அரசு கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்தை மேம்படுத்த ஒரு கிலோ புரதப்பொடி, ஆவின் நெய் ஆகியவற்றை வழங்குகிறது. இத்திட்டத்தை மேலும் செழுமைப்படுத்த நான்கு முதல் ஒன்பது மாத கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு முட்டையும் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கலாம்.
‘நேச்சர்’ அறிவியல் ஆய்விதழில் 2025இல் ஒரு முக்கியமான ஆய்வறிக்கை (ICMR- DIAB STUDY) வெளியானது. இந்தியா முழுவதும் வீடு வீடாக எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், ஒவ்வொருவரும் தங்களின் தினசரி உணவில் 12 சதவீதம் மட்டுமே புரத உணவை உட்கொள்வதாகத் தெரியவந்திருக்கிறது.