

எல்லாப் பொருள்களும் அணுவினால் ஆனவை. ஆனால், அந்த அணுவுக்குள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் உள்ளிட்ட - அணுவினும் நுண்ணிய துகள்கள் இருக்கின்றன என்கிறது அறிவியல். ஓர் அணுவில் உள்ள எலக்ட்ரான் என்பதை அதற்கு மேலும் பிரிக்க முடியாது.
எனவே, அது ஓர் அடிப்படைத் துகள் (fundamental particle). ஆனால், அணுவில் உள்ள புரோட்டானும் நியூட்ரானும் அடிப்படைத் துகள்கள் இல்லை. ஏனெனில், அவற்றை இன்னும் நுண்ணிய பொருள்களாகப் பிரிக்க முடியும். இப்படி, 17 அடிப்படைத் துகள்கள் உள்ளன என்று அறிவியல் கருதுகிறது. இவற்றைப் பற்றி ஆய்வை மேற்கொள்ளும் துறை ‘துகள் இயற்பியல்' (particle physics).
‘நியூட்ரினோ’ என்பது ஓர் அடிப்படைத் துகள். அவற்றுக்கு மின்னூட்டம் இல்லை. நிறை என்பது கிட்டத்தட்டச் சுழிதான். இக்காரணங்களால் நியூட்ரினோக்கள் அனைத்துப் பொருள்களையும் எளிதில் கடந்து போகின்றன.
ஒவ்வொரு நொடியும், நாம் உணராமலேயே, பல லட்சம் கோடி நியூட்ரினோக்கள் நம் உடலின் வழியாகக் கடந்து செல்கின்றன! நம்மை, பூமியை, இப்படி நொடிக்கு நொடி கோடிக்கணக்கில் கடந்து செல்லும் நியூட்ரினோக்களைக் கண்டறியும் கண்ணாமூச்சி விளையாட்டில் வெற்றி பெற்றிருக்கிறார் இந்த ஆண்டின் இயற்பியல் நோபல் விருதாளர், ஃபிரான்சிஸ் ஹால்சன் (Francis Halzen).
பனிக்கட்டி நியூட்ரினோ ஆய்வகம் (IceCube Neutrino Observatory) அமைப்பதிலும், விண்வெளி ஆதாரத்தில் (அதாவது, சூரிய குடும்பத்தைத் தாண்டி என்று புரிந்துகொள்ளலாம்) உருவான அதி ஆற்றல் நியூட்ரினோக்களைப் பற்றிய ஆய்விலும் தீர்க்கமாகப் பங்காற்றியதற்காக ஹால்சனுக்கு இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஹால்சனின் ஐஸ்கட்டி
ஃபிரான்சிஸ் ஹால்சன் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர். 1960களில் துகள் இயற்பியல் துறையில் நிகழ்ந்த முன்னேற்றங்கள் அவரை அத்துறையை நோக்கி ஈர்த்தன. முனைவர் பட்டத்தை முடித்த பிறகு, அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின்–மேடிசன் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார்.
அண்டக் கதிர்கள் (cosmic rays) என்னும் வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்போம். இந்தக் கதிர்கள் நியூட்ரினோ, புரோட்டான் இப்படிப் பல்வேறு துகள்களால் ஆனவை.
இந்த அண்டக் கதிர்கள் பல கோடி மைல்கள் விண்வெளியில் பயணித்து, பூமியை வந்தடையும், சில கதிர்கள் பூமியை ஊடுருவி, நம்மைத் தாண்டியும் செல்லும்.