காலநிலை மாற்றம்: அபாயத்தின் புதிய உச்சம்

காலநிலை மாற்றம்: அபாயத்தின் புதிய உச்சம்
Updated on
2 min read

அமெரிக்காவின் தேசியப் பெருங்கடல் - வளிமண்டல நிர்வாக அமைப்பு, நாசா விண்வெளிக் கழகம், ஐரோப்பாவின் காலநிலை அமைப்பான கோப்பர்நிகஸ், கிரேட் பிரிட்டனின் வானிலை ஆய்வு அலுவலகம், பெர்க்லி புவி அமைப்பு, உலக வானிலை ஆய்வுக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து, உலகெங்கிலும் உள்ள 25,000 வானிலை மையங்களிலிருந்து தரவுகளைச் சேகரித்து 2025ஆம் ஆண்டுக்கான காலநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளன. அறிக்கையில் காணப்படும் பல தகவல்கள் பெரும் கவலை அளிப்பவையாக இருக்கின்றன.

அதிகரிக்கும் வெப்பம்: கடந்த ஆண்டின் தொடக்கத்தில் லா நினாவின் சில கூறுகள் இருந்தன. மார்ச் மாதத்தில் இவை சமநிலையை எட்டின. பிறகு 2025 செப்டம்பரில் லா நினா மீண்டும் தொடங்கியது. எல் நினோ தெற்கு அலைவின் ஓர் அங்கமான லா நினா காலக்கட்டத்தின்போது வழக்கத்தைவிடக் குறைவான வெப்பநிலையே காணப்படும்.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக லா நினா சூழல் இருந்தபோதும் 2025இன் சராசரி வெப்பநிலை அதிகமாக இருந்ததை இந்த அறிக்கை தெள்ளத்தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. வரலாற்றில் இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட ஆண்டுகளிலேயே மூன்றாவது வெப்பமான ஆண்டாக 2025 இருந்திருக்கிறது. “ஒரு லா நினா ஆண்டிலும் உச்ச வெப்பநிலை நிலவியிருக்கிறது. இது மிகவும் கவலை அளிக்கிறது” என்கிறார் ஆராய்ச்சியாளர் ஸீக் ஹாஸ்ஃபாதர்.

2023இல் புதிய உச்சத்தைத் தொட்ட சராசரி வெப்பநிலை அதன்பிறகு அவ்வளவாகக் குறையவில்லை. பசுங்குடில் வாயுக்கள் அதிகரித்திருப்பது, கூடுதலான கரிம உமிழ்வுகள் ஆகியவற்றோடு இவற்றுக்கு வேறு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.

மேகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம், வளிமண்டலச் சுழற்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சூரியனின் ஆற்றலை பூமிக்கு அருகிலேயே பிடித்துவைத்துக்கொள்ளும் ஏரோசால் துகள்கள், கடலில் அதிகமான வெப்பம் சேர்ந்திருப்பது ஆகியவற்றை முக்கியக் காரணிகளாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in