

நூறு நாள் வேலைத் திட்டம் என அழைக்கப்பட்ட ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட’த்துக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டிருக்கும் ‘விக் ஷித் பாரத் ஜி ராம் ஜி’ (VB–G RAM G) சட்டம் 2025 இந்தியாவின் ஊரக வளர்ச்சிக் கொள்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன் சாதக பாதகங்கள் தொடர்பாகப் பெரிய அளவில் விவாதங்களும் நடக்கின்றன.
மிக முக்கியமாக, இச்சட்டம் உள்ளாட்சிகளின் அடிப்படைத் தன்மையையே மாற்றியமைக்கிறது என்றும், 73ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் ஜனநாயகத் தூணாக விளங்கும் கிராம சபையின் அதிகாரத்தைக் குறைப்பதாகவும் எழும் விமர்சனங்கள் பரிசீலனைக்கு உரியவை.
மாறும் சூழல்: 73ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் என்பது வெறும் நிர்வாக மாற்றம் அல்ல; அது மக்களின் வீட்டு வாசலுக்கே அதிகாரத்தைக் கொண்டுவந்த ஒரு புரட்சிகரமான மாற்றம். அரசமைப்புச் சட்டத்தின் 243A, 243G பிரிவுகளின் கீழ், கிராம சபை என்பது கிராமத்தின் சமூக நீதிக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் திட்டமிடும் மிக உயரிய அதிகார அமைப்பாகக் கருதப்படுகிறது.
இது வெறும் வேலைவாய்ப்பை மட்டும் உருவாக்கவில்லை; ‘அடித்தட்டு மக்கள் சார்ந்த திட்டமிடல்’ (Bottom-up planning) முறையை நிலைநிறுத்தியது. கிராம மக்கள் ஒன்றுகூடித் தங்களுக்கான ஊரக வளர்ச்சித் தேவைகளைத் தாங்களே முடிவுசெய்தனர். அதிகாரிகளை நேருக்கு நேர் ‘சமூகத் தணிக்கை’ (Social Audit) மூலம் கேள்வி கேட்டனர். அது உள்ளாட்சி ஜனநாயகத்தின் உண்மையான செயல்வடிவமாக இருந்தது.
உள்ளூர் திட்டமிடலில் மாற்றம்: புதிய சட்டம், ‘விக் ஷித் கிராமப் பஞ்சாயத்து’ திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. ஆனால், இதில் மிகப்பெரிய சிக்கல் உள்ளது; இந்தத் திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் ‘விக் ஷித் பாரத் தேசிய ஊரக உள்கட்டமைப்பு அடுக்கு’ (Infrastructure Stack), ‘பிஎம் கதி சக்தி’ தேசியத் திட்டங்களோடு கட்டாயம் ஒத்துப்போக வேண்டும். இது அதிகார மையத்தை உள்ளூரிலிருந்து டெல்லிக்கு மாற்றும் செயலாகும்.