

இந்த வாரம் முழுதும் முகநூல், புலனம் எனச் சமூக ஊடகங்களில் எதைத் தொட்டாலும் பெருமாள்முருகனுக்கு வழங்கப்பட்ட ‘மான் பகதூர் சிங் லஹக் விருது’ பற்றிய பேச்சே நிறைந்திருந்தது. ‘ஜனகவி’ என்று விமர்சகர்களால் அழைக்கப்பட்ட மான் பகதூர் சிங் இந்திக் கவிதை உலகில் ஜெயக்கம்பம் நட்டவர்; மனித மாண்புக்கு எதிராகச் செயல்படும் இந்தியக் கிராமங்களின் சாதி அமைப்பையும் அதிகார மையங்களையும் வெளிக்காட்டியவர்; மனிதாபிமானமும் இயற்கை அழகும் கொழிக்கும் புண்ணியத் தலமாகக் கிராமங்களைப் புனைவியல் பாங்கில் காண மறுத்தவர்.
ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிய மான் பகதூர் சிங் கல்வி வளாகத்திலேயே தனிப்பட்ட காரணங்களுக்காக 1996இல் பட்டப் பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அவர் படைப்புகள் வழியாகக் கிடைக்கும் உரிமைத் தொகையில் இயங்கும் அறக்கட்டளையும் ‘லஹக்’ கலை இலக்கியச் சமூக இதழும் இணைந்து இந்த விருதை வழங்குகின்றன. கொல்கத்தாவில் இருந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகச் சிற்றிதழ் பாரம்பரியத்தில் வெளிவரும் இந்தி மொழி இதழ் இது. இவ்விருதின் பொருட்டுப் பெருமாள்முருகனுக்குச் சிறப்பிதழையும் இவ்விதழ் கொண்டு வரவுள்ளது. ‘இந்திய மொழி ஒற்றுமை மன்றம்’ (Indian Language Unity Forum) விருது வழங்கும் நிகழ்வை முன்னின்று நடத்துகிறது.