

தமிழ்ச் சமூகம் நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டிய பேராசிரியர்களுள் ந.சஞ்சீவி (1927-1988) ஒருவர். சைவப் பின்புலம் உடைய குடும்பத்தில் பிறந்தாலும், அவர் தம் வாழ்க்கையில் சமயச்சார்பற்ற பொதுநிலையில் செயல்படும் மனிதராகவே இருந்தார்.
ஆங்கிலேயர்கள் நடைமுறைப்படுத்திய இரட்டை ஆட்சி முறையால், இந்தியர்களும் ஆட்சி அதிகாரம் பெற்றனர். இதன் விளைவாக ‘இந்தியத் தேசியம்’ எனும் கருத்து உருவானது. தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியத்தோடு இணைந்த இந்தியத் தேசியம் என்பதை ம.பொ.சிவஞானம் (1906-1995) முன்னெடுத்தார். பெரியார் ஈ.வெ.ரா (1879-1973) இந்தியத் தேசியத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை. சமூக நீதி மற்றும் சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்ட தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்தார். தமிழ்ப் பேராசிரியர்கள் சிலர் ம.பொ.சி முன்னெடுத்த இந்திய தேசியத்தைப் பேசினர்.