தமிழைத் தலைநிமிரச் செய்யும் கணினி மொழியியல்: முனைவர் ந.தெய்வசுந்தரம் நேர்காணல்
இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழோடு, இன்றைய நவீன யுகத்தின் தேவையாக ‘அறிவியல் தமிழ்’ என விரிந்து, அறிவுத்தளங்களில் பன்முகச் சிறப்போடு திகழ்வது தமிழ் மொழி. தமிழ் ஒரு கணினி மொழியாக (Tamil Computing) வளம் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இந்த இலக்கை நோக்கி ‘மென்தமிழ்’ உள்ளிட்ட மென்பொருட்களை உருவாக்கி, உலக அளவில் தமிழ்க் கணினி மொழியியலில் தடம் பதித்தவர் முனைவர் ந.தெய்வசுந்தரம்.
தமிழ்நாட்டின் மிகப்பெரும் ‘அறிவுப் பெருவிழா’ எனப் போற்றப்படும் சென்னைப் புத்தகக் காட்சி நடைபெற்று வரும் சூழலில், தமிழ் அறிவுத் தளத்தில் மிகவும் போற்றத்தக்க பணிகளைச் செய்துகொண்டிருக்கும் தெய்வசுந்தரம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு நேர்காணல் அளித்தார்.
கணினி மொழியியல் ஆய்வு (Computational Linguistics) என்றால் என்ன? அதன் அவசியம் என்ன?
கணினிகள், அடிப்படையில் இயந்திர மொழிகளையே (Machine Languages) புரிந்து கொள்கின்றன. மனித மொழிகளான இயற்கை மொழிகளை அவற்றுக்குத் தெரியாது. எனவே, கணினிக்கு மனித மொழிகளைக் கற்றுக்கொடுக்கும் பணிகளை உள்ளடக்கிய துறையே ‘கணினி மொழியியல்’ (Computational Linguistics) எனப்படுகின்றது. சீனா, ஜப்பான், பிரான்சு போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மொழிகளைக் கணினி மொழியாகத் தரம் உயர்த்த 1970களிலேயே ஆய்வுகளைத் தொடங்கிவிட்டன.
இது வெறும் கணினித் தொழில்நுட்பம் சார்ந்த பணி மட்டுமல்ல; இலக்கணம் மற்றும் மொழியியல் ஆய்வாளர்களுடன் ஒருங்கிணைந்து செய்யப்பட வேண்டிய ஒன்று. இந்தியாவில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு ஐஐடிகளில் சமஸ்கிருதம், இந்தி போன்ற மொழிகளுக்குப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டு ஆய்வுகள் நடக்கின்றன. தமிழிலும் இத்தகைய தீவிர ஆய்வுகள் இல்லை என்பதற்காக மிகவும் கவலைப்பட்டேன்.
