

1970களின் பிற்பகுதி; ஒரு மாலைப்பொழுதில் கோவில்பட்டியில் கவிஞர் தேவதச்சனின் கடை வாசலில் பூமணியை முதன்முதலாகச் சந்தித்தேன். “புதுசா எழுதிக்கிட்டிருக்காரு” என்று என்னை அறிமுகப்படுத்தினார் தேவதச்சன். அன்று இலக்கியத்தின் பயன்மதிப்பு பற்றிக் காரசாரமான விவாதம். “ஒரு லீவு லெட்டருக்கு என்ன பயன்மதிப்போ, அதுதான் கதை கவிதைக்கும்” என்று பூமணி ஆவேசமாகப் பேசினார்.
அதை தேவதச்சன் மறுத்தார். இந்த முதல் சந்திப்பைப் போலவே, பின்னாளிலும் சென்னை, கோவில்பட்டி என எல்லா சந்திப்புகளிலும் கலை சார்ந்த அடிப்படைக் கேள்விகளையே நாங்கள் விவாதித்திருக்கிறோம்.
படைப்பு ஆளுமை: பூமணியின் ‘வயிறுகள்’ சிறுகதைத் தொகுப்பு வந்திருந்தது. அந்நூலை “எங்கள் முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணனுக்கு” என்று சமர்ப்பணம் செய்திருந்தார். நவீன இலக்கிய உலகில் ‘முன்னத்தி ஏர்’ என்ற சொல்லாடலைத் தொடங்கியவர் பூமணிதான். கி.ரா கட்டியெழுப்பிய கரிசல் இலக்கிய சாம்ராஜ்ஜியத்தின் பிரதான அமைச்சர்களில் ஒருவர் பூமணி; நாங்களெல்லாம் அதன் பிரஜைகள். கி.ரா பதிவு செய்த கரிசல் நிலப்பரப்பின் விவரிப்புகளில் விடுபட்டுப்போன ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும், அவர்கள் பார்வையிலான நிலவியலையும் அழுத்தமான கறுப்பு-வெள்ளைக் கோடுகளால் தீட்டியவர் பூமணி.