வளர்ச்சிப் பேரிடராகும் மாமல்லன் நீர்த்தேக்கம்

வலசைப் பறவை வாழிடங்களையும் உள்ளூர் உணவாதாரத்தையும் முற்றாக அழித்துவிடும்
வளர்ச்சிப் பேரிடராகும் மாமல்லன் நீர்த்தேக்கம்
Updated on
3 min read

சென்னைக்குத் தெற்காக முட்டுக்காடு கழிமுகம் தொடங்கி, தெற்கே ஒதியூர் கழிமுகம் வரை கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும் பழைய மகாபலிபுரம் சாலைக்கும் இடையில், ஏறத்தாழ 30 கி.மீ. நீளத்தில் அமைந்திருக்கிறது நெம்மேலி கழி. 69 சிறிதும் பெரிதுமான ஏரிகளும் கண்மாய்களும் வெள்ளநீர்ப் பாதைகளால் இணைக்கப்பட்டுள்ள நெம்மேலி ஈரநிலம் ஓர் உவர்நீர்ப் பரப்பு.

உவர் சதுப்புநிலம் (salt marsh), சேற்றுப்படுகை (mudflats), அலையாத்திகள் உள்ளிட்ட பலவகைச் சூழலியல் கட்டமைப்புகளின் சேகரம் இப்பகுதி; 230க்கும் மேற்பட்ட பறவைகளின் வாழ்விடம். ராம்சர் தலமாக அறிவிப்பதற்கான அனைத்துத் தகுதிகளும் கொண்ட நீர்நிலையும்கூட.

பிழையான திட்டம்

8,500 ஏக்கர் பரப்பு நெம்மேலி ஈர நிலத்தில் திருப்போரூர், திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்கு நன்னீர் வழங்குவதற்காக மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்துக்கு 2026 ஜனவரியில் அடிக்கல் நாட்டினார் முன்னாள் முதல்வர் ஸ்டாலின். திட்டத்தின் முதற்கட்டமாக 4,375 ஏக்கர் பரப்பைச் சூழ்ந்து தடுப்பணை (மடு) அமைக்கப்படுகிறது.

இதற்காக, இதைத் தொட்டமைந்துள்ள பக்கிங்ஹாம் கால்வாயின் பாதை மாற்றியமைக்கப்படுகிறது. அதோடு, கடலுடனான கால்வாயின் தொடர்பும் தடைசெய்யப்படுகிறது. மாமல்லன் நீர்த்தேக்கம் ஒரு நல்ல நோக்கத்தை முன்வைத்து, தவறான தரவுகளின் அடிப்படையில், தவறான இடத்தில் தொடங்கப்பட்டுள்ள பிழையான திட்டம்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் நீர்வள மேம்பாட்டுத் துறை அளித்த தொழில்நுட்ப / பொருளாதாரச் சாத்தியப்பாடு (Pre feasibility study) அறிக்கை, இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் வழங்கிய மூன்று மாதச் சூழலியல் ஆய்வறிக்கை - இந்த இரண்டின் அடிப்படையில்தான் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட ஆய்வு பருவமழைக் காலத்தில் அல்லாமல், கோடை மாதங்களில் நிகழ்த்தப்பட்டது என்பதுதான் அந்த ஆய்வறிக்கையின் போதாமை. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கிழக்குக் கடற்கரைச் சாலைத் திட்டத்தில் இதே தவறை இழைத்து, பிறகு பாதையைத் திருத்த வேண்டியதாயிற்று.

மீனவர்களின் வாழ்வாதாரம்

பருவமழை, ஓதங்கள், நீரியல், காற்று, அடித்தரை மண், உயிர்ப்பன்மை, உடனுறை சமூக வாழிடம், உணவாதாரம் இவற்றையெல்லாம் பழுதின்றி ஆராய்ந்த பிறகே இது போன்ற ஒரு பெருந்திட்டம் தீட்டப்பட வேண்டும். ஆனால், சூழலியல் தாக்க மதிப்பீடு, சமூகத் தாக்க மதிப்பீடு இல்லாமல், தமிழக மீன்வளத் துறையின் தடையின்மைச் சான்றிதழ் பெறாமல் திட்டப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

கரைக்கடலின் மீன்வளம் கரையில் உள்ள கழிமுகம் உள்ளிட்ட உவர்நீர்ப் பரப்புகளைச் சார்ந்திருக்கிறது. நன்னீரும் உயிர்ச்சத்துகளும் மட்டுமல்ல, குஞ்சுமீன்களும் இங்கிருந்துதான் கடலுக்குப் போகின்றன. கடலில் பாடு குறையும் பருவங்களில் விழுப்புரம் கடலோர மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு பக்கிங்ஹாம் கால்வாயை நம்பியிருப்பதுபோலவே, கடலோரக் கிராமங்களைச் சேர்ந்த 12,000 மரபார்ந்த மீனவர்களுக்கு நம்பகமான வாழ்வாதாரமாக இது இருந்துவருகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in