

ஒரு சமூகத்தின் வரலாறு, பண்பாடு, அறிவியல் சிந்தனை, உலகநோக்கு ஆகியவை அதன் மொழியில் ஆழமாகப் பதிந்துள்ளன.
தலைமுறைகளாகப் பரிமாறப்படும் அறிவும் மொழியின் வழியே பாதுகாக்கப்படுகிறது. இந்திய அறிவு மரபில் இலக்கணம், இலக்கியம், தத்துவம், தர்க்கம், மருத்துவம், கணிதம், வானியல் உள்ளிட்ட துறைகளில் உருவான சிந்தனைகளை நவீன மொழியியல் பார்வையில் மறுஆய்வு செய்வது அவசியமானதாகிறது.
மொழியியல் என்பது ஒலி, சொல், இலக்கணம் ஆகியவற்றை மட்டும் ஆராய்வதல்ல; மொழி, சிந்தனை, சமூகம், பண்பாடு, அறிவு ஆகியவற்றின் பரஸ்பரத் தொடர்புகளையும் விளக்கும் அறிவியல் துறையாகும்.
இவ்வகையில் தொல்காப்பியம், பாணினியின் அஷ்டாத்தியாயி, சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் இந்தியத் தத்துவமரபுகளை நவீன மொழியியல், சமூக மொழியியல், வரலாற்று மொழியியல், குறியீட்டியல், அறிவாற்றல் அறிவியல் ஆகிய துறைகளுடன்ஒப்பிட்டு வாசிப்பது புதிய ஆய்வுப் பரப்புகளைத் திறக்கும்.
தொல்காப்பியத்தின் எழுத்து, சொல், பொருள் அமைப்பும் அகம் – புறம் சார்ந்த வாழ்வியல் வகைப்பாடும் மொழி, சமூகம், பண்பாடு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை வெளிப்படுத்துகின்றன. பாணினியின் விதிமுறை சார்ந்த இலக்கண அணுகுமுறையை முறைசார் இலக்கணம், கணினி மொழியியல் மற்றும் இயற்கை மொழி செயலாக்கத்துடன் ஒப்பீட்டளவில் ஆராயலாம்.
பர்த்ருஹரியின் ஸ்போடக் கோட்பாடு, பௌத்த – சமண தர்க்க மரபுகள், சைவ சித்தாந்த உரை மரபுகள் ஆகியவை சொல், பொருள், அறிவு மற்றும் விளக்கவியல் தொடர்புகளைப் புரிந்துகொள்ள வளமான ஆதாரங்களாகின்றன.