

‘இந்தத் தொழில்நுட்பம் பாதுகாப்பானது இல்லை’ - இந்த வரியை நாம் எப்படி வேண்டுமானாலும் புரிந்துகொள்ளலாம் அல்லது விளக்கம் அளிக்கலாம். ஆனால், அன்பு மகனைப் பறிகொடுத்த ஒரு தாயின் வேதனையாக வெளிப்பட்ட வார்த்தைகள் என்பதை மனதில் கொண்டால், இந்த வரிக்குப் பின்னே உள்ள தீவிரத்தை உணரலாம்.
உயிர் பறித்த உரையாடல்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிகாரபூர்வமில்லாத விசாரணையின்போதுதான், அந்தப் பெண்மணி இவ்வாறு கூறியிருந்தார். அவரது 19 வயது மகன் சாம் நெல்சன் கடந்த ஆண்டு சுவாசக்கோளாறு ஏற்பட்டுத் திடீரென மரணமடைந்தார்.
சாமுக்கு இந்தக் கதி ஏற்பட்ட விதம்தான் அவரது தாயை உலுக்கியது. கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம், சாட்ஜிபிடி ஏஐ சாட்பாட்டைத் தனது நண்பன்போலக் கருதியிருக்கிறார். வீட்டுப்பாடம் தயார் செய்வது தொடங்கி நட்பான உரையாடல்வரை எல்லாவற்றுக்கும் அவர் சாட்ஜிபிடியை நாடியிருக்கிறார். இது கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு நீடித்தது.
ஒருகட்டத்தில் போதைக்கு ஆசைப்பட்ட சாம், இது தொடர்பாக ஆலோசனை கேட்டபோது சாட்ஜிபிடி அளித்த பதிலால்தான் விபரீதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில போதைப் பொருள்களுடன் மதுவைக் கலந்து அருந்தலாமா என அவர் கேட்டிருக்கிறார்.
இது பாதுகாப்பானது என சாட்ஜிபிடி பதில் அளித்திருக்கிறது. இதுவே சுவாசக்கோளாறு ஏற்படுத்தி அவரது உயிரைப் பறித்திருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, சாமின் பெற்றோர்கள், ஒரு சில அமைப்புகளின் உதவியோடு கலிபோர்னியா நீதிமன்றத்தில் இந்த ஆண்டு மே மாதம் வழக்குத் தொடர்ந்தனர்.
நஷ்டஈடு கோரப்பட்டதோடு, பிரச்சினைக்குக் காரணமான ஏஐ மாதிரி நிரந்தரமாக அழிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். ‘இது நெஞ்சை உலுக்குகிறது.
இந்த உரையாடல், தற்போது பயன்பாட்டில் இல்லாத சாட்ஜிபிடியின் முந்தைய வடிவத்தில் நிகழ்ந்தது’ என இது தொடர்பாக சாட்ஜிபிடியின் தாய் நிறுவனம் ஓபன் ஏஐ கருத்து தெரிவித்திருந்தது.
மருத்துவம் அல்லது மனநல ஆலோசனைக்கு சாட்ஜிபிடி மாற்று அல்ல. மனநல வல்லுநர்கள் உதவியோடு, இதுபோன்ற சிக்கலான, நெருக்கடியான தருணங்களில் சாட்ஜிபிடி எப்படிப் பதில் அளிக்கிறது என்பதை வலுவாக்கி வருகிறோம்’ என்றும் நிறுவனம் தெரிவித்திருந்ததாக சிநெட்.காம் செய்தி குறிப்பிடுகிறது.
மறைந்துபோன தார்மிகம்
இந்நிலையில்தான், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்றுள்ளது. இது அதிகாரபூர்வ விசாரணை அல்ல. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் சார்பில் நடத்தப்படும் பொது விவாதம் வகையைச் சேர்ந்த நிழல் விசாரணையாக இது அமைகிறது.