

மனிதர்களைப் பணிகளின் அடிப்படையிலேயே பார்க்கிற நெருப்புக்கோழிப் பார்வை நமக்கு உண்டு. அவர்களுக்குள் அடங்கியிருக்கும் ஆற்றல்களின் அகல நீளங்களை அலசுவதற்கு நமக்கு அவகாசம் இருப்பதில்லை. தவிர்க்க முடியாத பணிகளைச் செய்யும் மனிதர்களின் பெயர்களையே தவிர்த்துவிடுகிறோம். அவர்களை ஒரே ஒரு முறை பெயர் சொல்லி அழைத்தால், அவர்கள் பெருமிதப்படுவார்கள் என்பதை நாம் உணர்வதில்லை.
நமக்கு எப்போதும் எந்த விதத்திலும் தொடர்பில்லாத மனிதர்களின் பெயர்களை நினைவில் வைத்திருப்போம். அவர்கள் பிறந்தநாள்களைக் கொண்டாடுவோம். அவர்களுக்காகச் சண்டையிடுவோம். ஊடுருவிப் பார்த்தால் அவர்களே நமக்குக் கடமைப்பட்டவர்கள். நாம் யாருக்கு உண்மையிலேயே கடமைப்பட்டிருக்கிறோமோ, அவர்களின் பெயர்கள் நமக்கு முக்கியமும் இல்லை, அப்படியே எப்போதாவது சடங்காகக் கேட்டால், அது நம் நினைவில் ஒட்டடை போலக்கூட ஒட்டிக்கொண்டிருப்பதில்லை.
புறக்கணிக்கும் மனப்பான்மை: ஒரு மனிதருக்கு உலகிலேயே உன்னதமான இசை அவரது பெயர் உச்சரிக்கப்படும் ஓசைதான். மனிதர்களைப் பணிகளாகப் பார்த்தால் பெயர்கள் பெரிதாகத் தோன்றாது. ஏனென்றால், பணிபுரிகிறவர்கள் மாறுவார்கள். ஆனால், பெயர்களோ ஒருவருக்கு எப்போதும் ஒன்றுதான். சீருடைப் பணிகளில்தாம் எண்களால் அழைப்பது வழக்கம்.
ஏனென்றால், அங்கு எண்கள் இயந்திரத்தன்மையைக் குறிக்கும். எளிய மனிதர்களை நாம் முக்கியமாகக் கருதுவதில்லை. அவர்களின் பெயர்களைக்கூட அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறோம். தூய்மைப் பணியாளர்களின் பணியை நாம் பெருந்தொற்றுக் காலத்தில் பாராட்டி மகிழ்ந்தோம். தங்கள் இன்னுயிருக்கு இன்னல் வந்தாலும் பரவாயில்லை என்று களத்தில் இறங்கி அவர்கள் கடும்பணி ஆற்றினார்கள்.
அவர்களுக்கும் உயிருண்டு என்பதை நாம் உணராமலேயே இருந்துவிட்டோம். அவர்களுக்கு வீட்டிலிருந்தே பணிசெய்ய அனுமதியளிக்க வாய்ப்பில்லை. அவர்கள் தெருவில் இறங்கிப் பணியாற்றாமல் இருந்திருந்தால் நம் இல்லங்களின் முன்பு குப்பை கோபுரங்கள்போலக் குவிந்திருக்கும். ஆறு மணிக்கே ஆஜராகி நம் தெருவைத் தூய்மைப்படுத்துகிறார்களே... அவர்கள் வீட்டில் எப்போது சமைத்துவிட்டு வருவார்கள் என்று நாம் சிந்தித்ததில்லை; எங்கு அமர்ந்து உணவருந்துவார்கள் என்றும் கவலைப்படுவதில்லை.
நம்மைப் பொறுத்தவரை அவர்கள் சதைகள் உள்ள இயந்திரங்கள்; இதயத்தையும் கழற்றிவைத்துவிட்டுப் பணியாற்றக் கடமைப்பட்டவர்கள். அவர்களின் பணியைப் பொதுவாகப் பாராட்டுவோம். ஆனால், பெரிதாக உதவ மாட்டோம். 2022ஆம் ஆண்டு அடித்த மாண்டஸ் புயலில் வீழ்ந்த மரங்களை இரவோடு இரவாகச் சுவடு தெரியாமல் அப்புறப்படுத்திய கடமை வீரர்கள் அவர்கள்.